Published : 11 Jun 2024 05:47 PM
Last Updated : 11 Jun 2024 05:47 PM
சென்னை: சென்னை எழும்பூர் கோ-ஆப் டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அரசின் கைத்தறி, துணிநுால் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும், கோ-ஆப்டெக்ஸ், 89 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டது. இது, இந்திய அளவில், முன்னணி கைத்தறி நிறுவனமாக செயல்படுகிறது. தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து, நாடு முழுவதும் உள்ள 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் தலைமையகம் சென்னை எழும்பூரில் இருக்கிறது. இங்கு கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டுமாளிகை செயல்படுகிறது. இங்கு எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இப்பிரிவை கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஆனந்தகுமார் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியது: “கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் எலைட் பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்கு உயர்தரமான பட்டு ரகங்கள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, வெவ்வேறு வகையான பட்டுப்புடவை, பருத்தி சேலை உள்பட 50 ரகங்களில் புடவைகள், சேலைகள் வைக்கப்பட உள்ளன. தனியார் கடைகளுக்கு நிகராக பிரத்யேக பட்டுபுடவைகள் இங்கு கிடைக்கும்.
இதைத் தவிர, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, ஒசூர் ஆகிய நகரங்களிலும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் எலைட் பிரிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தற்போது 450 ரகங்களில் 25 லட்சம் முதல் 30 லட்சம் பொருட்கள் உள்ளன. இவைகள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் தவிர ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கோ - ஆப்டெக்ஸ் மூலமாக 2023-24-ம் ஆண்டில் ரூ.215 கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT