Published : 03 Jun 2024 10:23 AM
Last Updated : 03 Jun 2024 10:23 AM
மும்பை: கடந்த சனிக்கிழமை மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருந்தன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லி இருந்தன. இந்த சூழலில் இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று (திங்கட்கிழமை) உச்சத்தை எட்டியுள்ளது.
பங்கு வர்த்தகம் காலை தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 50-ம் 808 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதனால் 23,338.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் முதலீட்டாளர்கள் குஷி அடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மீதான விலை ஏற்றம் கண்டுள்ளது. அதோடு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 43 பைசா ஏற்றம் கண்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் இன்று ஏற்றத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகளின்போது பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றினால் பங்கு வர்த்தகம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொடும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள், அதானி, முகேஷ் அம்பானி நிறுவனங்களின் பங்குகள் முக்கியத்துவம் பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று பெரும்பாலான ஊடக கணிப்பு தெரிவித்தன. இதனால், இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்தில் காணப்படும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். அதுவே தற்போது நடந்துள்ளது.
இந்தியாவை சர்வதேச அளவிலான உற்பத்தி மையமாக கட்டமைப்பதற்கான முயற்சியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடரும் என முதலீட்டாளர்கள் எதிரபார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. அதன் காரணமாக பங்குச் சந்தை உச்சத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தலின் இறுதி முடிவோடு பொருந்துவது அவசியம் என்றும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT