Published : 01 Jun 2024 06:29 AM
Last Updated : 01 Jun 2024 06:29 AM
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
யுபிஏ ஆட்சிக் காலத்தில் ஸ்டார்ட்அப் மற்றும் சிறு தொழில்களை விரிவுபடுத்த விரும்பும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கடன் தேவைகளும், கனவுகளும் முடக்கப்பட்டன. இதற்கு, வங்கிகளில் காணப்பட்ட நிதி நிர்வாக குளறுபடிகளே முக்கிய காரணமாக இருந்தது. மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு இந்த அவலநிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது.
கடந்த 2015-ல் பெரிய மதிப்பிலான வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டு விசாரணைக்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. திவால் நிலை குறியீடு (ஐபிசி) உருவாக்கப்பட்டது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக 2018-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ரூ.250 கோடிக்கும் மேல் உள்ள கடன்களை திறம்பட கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு முகமைகள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால், எதிர்க்கட்சிகள் எப்போதும்போல் பொய்களை பரப்புவதையே வழக்கமான பணியாக செய்து வருகின்றன. 2014 மற்றும் 2023- க்கு இடையில் எந்த ஒரு தொழிலதிபருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. நிதி மற்றும் பொருளாதாரத்தில் நிபுணர்கள் எனக் கூறிக் கொண்டாலும் எதிர்க்கட்சி தலைவர்களால் இன்னும் ரைட்-ஆஃப் (Write-offs)மற்றும் தள்ளுபடியை (Waiver) வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.
அமலாக்கத் துறை 1,105 மோசடி வழக்குகளை விசாரித்து அதன் விளைவாக ரூ.64,920 கோடியை பறிமுதல் செய்துள்ளது. டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.15,183 கோடி மதிப்புள்ள சொத்துகளை அரசு வங்கிகள் மீட்டெடுத்துள்ளன.
வாராக் கடன் பிரச்சினைக்கு காங்கிரஸ் காலத்தில்தான் விதைதூவப்பட்டது. அப்போது அரசியல்வாதிகளுக்கு சாதகமாக வங்கியின் தலைமை நிர்வாகிகள் நடந்துகொண்டுள்ளனர். பொதுத் துறை வங்கிகள் 2023-24-ல் நான்கு மடங்கு அதிகமாக அதாவது ரூ.1.41 லட்சம் கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளன.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT