Published : 10 Apr 2018 09:06 AM
Last Updated : 10 Apr 2018 09:06 AM

ஆன்லைன் ராஜா 22: இதுதான் பாதை, இதுதான் பயணம்!

1994

- இல் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks) நடித்த Forrest Gump என்னும் ஹாலிவுட் படம் வெளியாகியிருந்தது. வசூலில் சாதனை படைத்ததோடு, சிறந்த படம் என்னும் ஆஸ்கர் பரிசு, டாம் ஹாங்க்ஸுக்குச் சிறந்த நடிகர் ஆஸ்கார் ஆகிய கிரீடங்கள். படத்தில் வரும் ஹீரோவை முட்டாள் என்று எல்லோரும் கேலி செய்கிறார்கள். விடாமுயற்சியால் முன்னேறுகிறான். படகு வாங்கி இறால் மீன்கள் பிடிக்கிறான், பணம் சேர்க்கிறான். உழைப்பின் உயர்வைக் காட்டும் இந்தப் படத்துக்கு ஜாக் மா மகா ரசிகர். ஆகவே, இந்த உதாரணத்தை உதவிக்கு எடுத்துக்கொண்டார்.

“அமெரிக்க ஆன்லைன் கம்பெனிகள் திமிங்கலங்களைக் குறி வைக்கின்றன. கடலின் உயிர்வாழ் இனங்களில் திமிங்கலங்கள் குறைவு. 85 சதவிகிதம் இறால் மீன்கள். நம் பிசினஸின் குறி இறால் மீன்கள். திமிங்கலம் பிடித்து யாராவது பணம் பண்ணுகிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இறாலில் கோடிகள் சம்பாதிப்பவர்கள் ஏராளம்.”

ஜாக் மாவின் கருத்து அனைவர் மனங்களிலும் ஒட்டிக்கொண்டது - அமெரிக்கக் கம்பெனிகளின் கவனம் பிரம்மாண்டக் கஸ்டமர்கள் மேல். நம் பிசினஸின் இலக்கு சிறிய, மத்திம கஸ்டமர்கள்*.

(*இந்தக் கூட்டத்தில் தான் விளக்கியது ஒரு புது மேனேஜ்மென்ட் கொள்கை என்று அப்போது ஜாக் மாவுக்குத் தெரியாது. ஏன் தெரியுமா? சான் கிம் (Chan Kim), ரெனி மாபோர்ன் (Renee Mauborgne) ஆகிய இருவரும் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற எம்.பி.ஏ. கல்லூரியான INSEAD - இல் பேராசிரியர்கள். பல நூறு நிறுவனங்களின் மேனேஜ்மென்ட் யுக்திகளை ஆராய்ச்சி செய்த இவர்கள் 2005 - ஆம் ஆண்டில் தங்கள் பிசினஸ் வெற்றிக்கான மந்திரச் சாவியாகத் தங்கள் கண்டுபிடிப்பை, நீலக்கடல் யுக்தி (Blue Ocean Strategy) என்னும் பெயரில் வெளியிட்டார்கள். குவிந்தது புகழ். இந்த யுக்தி என்ன சொல்கிறது? போட்டிகள் வரும்போது, சாதாரணமாகக் கம்பெனிகள் விலையைக் குறைப்பார்கள், விளம்பரத்தைக் கூட்டுவார்கள். எல்லாக் கம்பெனிகளுக்கும் செலவு அதிகமாகும், ஆனால் வருமானம் அதிகரிக்காது. விரைவில் எல்லாக் கம்பெனிகளும், நஷ்டம் என்னும் சிவப்புக் கடலில் தவிப்பார்கள். இதைச் செய்யக்கூடாது. பரந்து விரிந்த நீலக்கடல் போல் புதிய கஸ்டமர்களை உருவாக்கவேண்டும். ஜாக் மா தன் சித்தாந்தத்தை விளக்கியது 1999 - இல். சான் கிம், ரெனி மாபோர்ன் ஆகிய பேராசிரியர்களுக்கு ஆறு வருடங்கள் முன்னால்!)

ஜாக் மா ஒரு ஷோமேன். பேச்சின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டார். கிளைமாக்ஸ் யாராலும் மறக்கமுடியாததாக இருக்கவேண்டும். தன் பாக்கெட்டில் கை விட்டார். பர்சை எடுத்தார். திறந்தார். கரன்சி நோட்டுக்கள், சில்லறை. அத்தனையையும் மேசை மேல் போட்டார்.

“இது என் மொத்தக் கையிருப்பு. அத்தனையையும் இந்த பிசினஸில் முதலீடு செய்கிறேன். என்னோடு சேர விரும்புபவர்கள் அடுத்த சில மாதங்களுக்கு வீட்டுச் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துவைத்துக்கொண்டு மீதம் மட்டுமே கொண்டு வாருங்கள். சொந்தப் பணத்தைத் தவிர, உறவுகளிடமோ, நண்பர்களிடமோ கடன் வாங்காதீர்கள். ஏனென்றால், நம் முயற்சியில் தோல்வி காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பிறர் காசை வைத்து நாம் விளையாடக்கூடாது. நாம் கீழே விழுவோம். ஆனால், அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) போல், கீழே விழும்போதெல்லாம் மறுபடி எழுவோம். உடலில் உயிர் இருக்கும்வரை போராடுவோம்.”

ஜாக் மா பேச்சை முடித்தார். யாருமே பேசவில்லை. அமைதி, அமைதி. இந்த மெளனம் சம்மதமா அல்லது நிராகரிப்பா - ஜாக் மா மனம் நிறையக் கேள்விகள்.

அடுத்த சில நிமிடங்கள். கை தட்டல்கள், ஆரவாரக் கூச்சல்கள். ஜாக் மா வீடு அதிர்ந்தது. ஜாக் மாவோடு கை கோர்க்க அவர் மனைவி உட்பட்ட அத்தனை பேரும் சம்மதித்தார்கள். 17 பங்காளிகளுக்கும் தன் ஐடியா விதையை ஜாக் மா விருட்சமாக்குவார் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை. தங்கள் சேமிப்புப் பணங்களைக் கொண்டுவந்தார்கள். மொத்தம் 5 லட்சம் யான்கள் தேறியது. (அன்றைய மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய்). 18 அன்றாடங்காய்ச்சிகளுக்கும் இது மிகப் பெரிய அமெளன்ட். ஆனால், ஜாக் மாவின் அகில உலக ஆன்லைன் பிசினஸ் கனவுக்கு இது ஜுஜூபி. அவரைப் பொறுத்தவரை இன்டர்நெட் பிசினஸ் தொடங்கி நடத்த முக்கியம் மூலதனமல்ல, மூளை. ஐடியா கைவசம் இருந்தால், பணமும், வெற்றியும் தேடி வரும்.

18 பேரின் சேமிப்பும் கையில் வந்தவுடன், ஜாக் மாவுக்கு வந்தது, நான் முதலாளி என்னும் தன்முனைப்பல்ல, நம்மை நம்பி இவர்கள் தந்திருக்கும் பணத்தைப் பாதுகாக்கவேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சி. பெரும்பாலான முனைவர்கள் தங்கள் தொழில் நுட்பத்தில் கில்லாடியாக இருப்பார்கள். நிதி நிர்வாகத்தில் அறிவும், அனுபவமும் குறைவாக இருக்கும். இதனால், நிதிப் பொறுப்பை அக்கவுண்டன்ட்களிடமும், ஆடிட்டர்களிடமும் விட்டுவிடுவார்கள். பணம் தண்ணீராக ஓடும். தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகுதான் உணர்வார்கள். இது குதிரை ஓடிவிட்டபின் லாயத்துக்குப் பூட்டுப்போடும் முட்டாள்தனம்.

``வரவு எட்டணா, செலவு பத்தணா, கடைசியில் துந்தணா” என்று பாடினார் கவிஞர் கண்ணதாசன். ஒளைவையார் தான் எழுதிய நல்வழி நூலில் அறிவுரை சொல்கிறார்,

``ஆன முதலில் அதிகம் செலவானால்

மானமிழந்து மதிகெட்டுப் போன திசை

எல்லோர்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்

நல்லோர்க்கும் பொல்லனாம் நாடு.”

அதாவது, வரவுக்குமேல் செலவு செய்து கடன் வாங்குபவன் தன்மானத்தையும், சிந்திக்கும் திறனையும் இழப்பான். எந்தத் திசையில் போனாலும் அவனைத் திருடனாக நடத்துவார்கள். அனைத்து நல்லவர்களும் அவனைத் தீயவனாகக் கருதுவார்கள்.

ஜாக் மாவுக்குக் கண்ணதாசனையும் தெரியாது, ஒளைவைப் பாட்டியையும் தெரியாது. ஆனால், முதல் இரண்டு பிசினஸ்களில் அவர் சூடுபட்ட பூனை. எனவே, கடனாளியாவதைவிடக் கருமியாக இருப்பது மேல் என்னும் பிசினஸ் சித்தாந்தம் அவர் ரத்தத்தில் ஊறிவிட்டது. முடிந்தவரை செலவைக் குறைக்கவேண்டும்.

தொழில் முனைவர்கள் செய்யும் முதல் தவறு, பிசினஸ் தொடங்கும்போதே, பந்தாவுக்காகத் தேக்கும், கண்ணாடியும் இழைத்த அலுவலகம், வரவேற்பறையில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பெண்கள். ஜாக் மாவைப் பொறுத்தவரை, செலவிடும் ஒவ்வொரு காசும், பங்காளிகளின் வியர்வை. கம்பெனியை வளர்க்க மட்டுமே பயன்படுத்தவேண்டும். மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருளையோ, சேவையையோ நீங்கள் வழங்கினால், காட்டுக்குள் இருந்தாலும் தேடி வருவார்கள். தாங்கள் ஆரம்பித்திருப்பது அகில உலக ஆன்லைன் பிசினஸ். கஸ்டமர்களோடு தொடர்பு இணையத்தில்தான். ஆகவே, ஆபீஸ் எங்கே இருக்கிறது என்பது அத்தனை முக்கியமல்ல என்பது ஜாக் மா கணிப்பு. தான் தங்கியிருந்த இரண்டு படுக்கையறைக் குடியிருப்பிலேயே அலுவலகம் தொடங்கினார். குடும்பம் நடத்தவேண்டும். 18 பேர் வேலை பார்க்கும்போது ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு வேலை பார்க்கவேண்டும். ஆரம்ப நாட்களில் செளகரியமா முக்கியம்? சிக்கனத்துக்காகக் கொடுத்த விலை.

அடுத்த சில நாட்கள். ஜாக் மாவின் புதிய பிசினஸ் பற்றிய திட்டம் வெளியே கசிந்தது. தொழில் நுட்பத்தில் பின் தங்கியிருக்கும் சீனாவில் ஆன்லைன் கம்பெனியா? அதுவும், உலகம் முழுக்க விற்பனை செய்யப்போகிறார்களாம். அமெரிக்காவோடு நம்மால் போட்டி போட முடியுமா? இவர்கள் வாழ்வு சில மாதங்கள்கூட நீடிக்காது என்று கெடு வைத்தார்கள். “கற்பனை உலகில் சஞ்சரிக்கும் பைத்தியக்காரர்” என்று ஜாக் மாவுக்குப் பட்டம் சூட்டினார்கள். எப்போதுமே, தீர்க்கதரிசிகளுக்கு முட்டாள் உலகம் வைக்கும் பெயர் இது. இவர்கள் எல்லோரும் சொல்வதைக் கேட்டால், அப்பாவும், மகனும் கழுதை சவாரி செய்த கதையாகிவிடும் என்று ஜாக் மாவுக்குத் தெரியும். இந்த விமர்சனங்களை ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டார். தன் முயற்சிகளில் மும்முரமாக இறங்கினார்.

கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கிறோம் என்பது மிக, மிக முக்கியமான விஷயம் என்று மார்க்கெட்டிங் மேதைகள் அடித்துச் சொல்லுவார்கள். ஜாக் மா கைகளில் எடுத்துக்கொண்ட முதல் வேலை - என்ன பெயர் வைக்கலாம்?

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x