Published : 31 Mar 2018 08:49 AM
Last Updated : 31 Mar 2018 08:49 AM

தொழில் ரகசியம்: `பணியின் அர்த்தமும், முக்கியத்துவமும் உணர்ந்தால்...’

 

ண்டதற்கெல்லாம் பட்டிமன்றம் நடத்தி பொழுதை போக்கும் தமிழ் திருநாட்டில் கம்பெனி ஊழியர்கள் சிறப்பாய் உழைக்க தேவை `செய்யும் பணியில் ஆர்வமா’ அல்லது `செய்யும் பணியின் நோக்கமா’ என்ற இன்று ஒரு பட்டிமன்றம் நடத்தலாம் என்றிருக்கிறேன். சும்மா இருந்தால் நீங்களும் வாங்களேன்.

பணி சிறக்க பேஷன் (Passion) தேவை என்பவர்கள் உண்டு. ஆர்வத்துடன், உற்சாகத்துடன் பணி செய்வது. மனதிற்கு பிடித்த ஒன்றை செய்யும் போது அது பணியாய் தெரியாது என்பதால் செய்யும் பணி சிறக்கும் என்று நினைப்பவர்கள் ஒரு கட்சி. பணிக்கு அர்த்தம் (Purpose) இருக்கவேண்டும். ஒரு நோக்கம் இருந்து அப்பணி மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்தால் அப்பணியை மனமுவந்து செய்வார்கள் என்று கூறுபவர்கள் மறு கட்சி. நீங்கள் எந்தப் பக்கம்?

நாமே ஏன் வாய்வலிக்க விவாதித்துகொண்டு. இக்கேள்விக்கு விடை தேட முயன்றார் ஒரு அமெரிக்க பாப்பையா. ‘கலிஃபோர்னியா பல்கலைக்கழக’ பேராசிரியர் ‘மார்டன் ஹான்சன்’. பேஷனா அல்லது நோக்கமா? பணிச் செயல் திறன் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது எது என்று ஆராய்ச்சியில் இறங்கினார். சுமார் ஐயாயிரம் ஊழியர்களையும் அவர்களின் மேலாளர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினார். ஆய்வு முடிவுகளை `Great at Work’ என்ற புத்தகமாய் எழுதினார்.

முதல் காரியமாய் பணியாளர்களை படத்தில் உள்ளது போல் நான்கு பிரிவுகளாக பிரித்தார். பணியில் அதிக ஆர்வமும் செய்யும் பணியின் அர்த்தம் அதிகம் இருப்பவர்கள் ஒரு பிரிவு (1). பணியில் ஆர்வம் அதிகமிருந்து அதன் அர்த்தம் குறைந்தாக நினைப்பவர்கள் ஒரு பிரிவு (2). செய்யும் பணியில் ஆர்வம் குறைந்திருந்து ஆனால் அர்த்தம் அதிகம் இருந்தவர்கள் ஒரு பிரிவு (3). ஆர்வமும் அர்த்தமும் குறைவாக இருந்தவர்கள் ஒரு பிரிவு (4).

மேலாளர்களிடம் அவர்களின் ஊழியர்கள் பணி செய்யும் முறைக்கேற்ப மார்க் தரச் சொல்லி இந்நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தச் சொன்னார். ஆர்வமும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் பணி செய்பவர்கள், அதாவது நான்காவது பிரிவினர்தான் இருப்பதிலேயே மகா தரித்திரங்கள் என்றார்கள் மேலாளர்கள். இல்லையா பின்னே. பணி செய்வதில் ஆர்வமும் இல்லாமல் செய்யும் பணி பெரிய நோக்கமும் அர்த்தமும் இல்லாதிருந்தால் அவர்கள் என்ன கிழிக்கப்போகிறார்கள்.

இதற்கு நேர் முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அசாத்திய ஆர்வமும் செய்யும் பணியில் அர்த்தம் இருந்து ஒரு நோக்கத்தோடு பணி செய்பவர்கள். இவர்கள்தான் பணியிடத்தில் நட்சத்திரங்களாய் ஜொலிப்பவர்கள் என்றார்கள் மேலாளர்கள். இதிலும் பெரிய ஆச்சரியம் இல்லையே.

மீதம் உள்ள இரண்டு பிரிவுகளில் தான் விஷயமே. மேலே குறிப்பிடும் இரண்டில் ஒரு குணத்தை மட்டுமே அதிகமாக கொண்ட பணியாளர்கள் கொண்டிருப்பவர்கள் எவ்வாறு பணி புரிவார்கள்? ஆர்வம் மட்டும் அதிகமிருப்பவர்கள் மற்றும் செய்யும் பணியின் அர்த்தம் மிகுந்தவர்கள் இவ்விரண்டு பிரிவில் யார் அதிக மார்க் வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இங்கு தான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆச்சரியம் அல்ல, அதிர்ச்சி என்றே கூறலாம். செய்யும் பணியில் அதிக ஆர்வமிருப்பவர்கள் ஆனால் அப்பணி அர்த்தம் குறைந்தாக நினைப்பவர்கள் மிக குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்தனர். அதற்கு நேர் எதிர் மூன்றாவது பிரிவினர். செய்யும் பணியில் பெரிய ஆர்வம் இல்லையென்றாலும் அது அர்த்தம் மிகுந்தது என்று நினைப்பவர்கள் இரண்டாவது அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஒவ்வொரு பிரிவும் பெற்ற மார்க்குகள் இதோ:

பட்டிமன்ற தீர்ப்பு புரிகிறதா? அர்த்தம் ஆர்வத்தை வெல்கிறது. Passionஐ விட Purpose தான் முக்கியம். ஆர்வம் என்பது ஒரு தனிமனித உணர்வு (individualistic). நம் உணர்வைத் தூண்டி உந்துதல் சக்தி தரக்கூடியதே. ஆனால் அது நம்மை தனிமைப்படுத்தவும் செய்யும். ஏனெனில் ஒருவரின் ஆர்வம் இன்னொருவருக்கும் இருக்கும் என்று கூற முடியாதே. ஆனால் அர்த்தம் என்பது பலர் பகிர்ந்துகொள்ள கூடியது. அனைவரையும் ஓர் அணியாக்கும் சக்தி கொண்டது.

பணியின் அர்த்தம் சுயம்புவாய் உருவாவதில்லை. பணியிடங்களில் பயிரிடப்பட்டு வளர்க்கப்படக்கூடியது. வளர்க்கப்பட வேண்டியது. தங்கள் ஆர்வத்திற்கேற்ப வெவ்வேறு திசையில் பிரிந்து போகக்கூடிய பணியாளர்களை ஒன்று சேர்க்கும் பொறுப்பு கம்பெனி நிர்வாகத்துடையது. செய்யும் பணியின் அர்த்தத்தை விளக்கி, அதன் நோக்கத்தை தெளிவுபடுத்தினால் ஊழியர்களுக்கு செய்யும் பணியின் நோக்கம் புரியும். அதை செவ்வனே செய்யும் உந்துதலும் வரும்.

ரேடியாலஜிஸ்ட்கள், அவர்களிடம் தரப்படும் எக்ஸ்ரே, எம்ஆர்ஐ, சிடி ஸ்கான் போன்றவற்றை பார்த்து படித்து அதை அலசி சொல்பவர்கள். யார் பேஷண்ட் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. தங்களிடம் தரப்படுவதைப் படித்து அது என்ன கூறுகிறது என்பதை ரிப்போர்ட் ஆக்கித் தருவதே அவர்கள் பணி. ஒரு ஆய்வில் அவர்களிடம் பேஷண்டுகளின் ஃபோட்டோக்களும் சேர்த்து காண்பிக்கப்பட்ட போது அவர்கள் படித்துப் பார்த்து தந்த ஸ்கான் ரிப்போர்டுகள் மிகத் துல்லியமாக இருந்தன. ஏன் என்று புரிகிறதா?

முகம் தெரியாத ஒருவரைப் பற்றிய குறிப்பு என்பதைத் தாண்டி உயிரும் சதையும் உள்ள ஒரு மனிதனைப் பார்க்கிறாய். அவர் நலத்திற்கு வழி சொல்லும் பொறுப்பான பணி உன்னுடையது என்று செய்யும் செய்யும் பணிக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும் போது ரேடியாலஜிஸ்டுகளுக்கு தங்கள் பணியின் நோக்கம் புரிகிறது. செய்யும் பணி சிறப்பானதாக அமைகிறது!

ஒவ்வொரு பணிக்கும் அடிநாதமாய் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை ஊழியரிடம் தெளிவாக கூறும்போது அவர் செய்யும் பணி அர்த்தம் மிகுந்ததாகிறது. `வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் ஒரு அழகான காட்சி. மருத்துவமனையை பெருக்கித் துடைக்கும் ஊழியர் தன் வேலை மீது பெரிய நாட்டம் இல்லாமல் வருவோர் போவோரை திட்டிக்கொண்டு இருப்பார்.

கமல் அவரிடம் வந்து அவர் செய்யும் பணி டாக்டர்கள் பணியை விட சிறந்தது என்று விளக்குவார். டாக்டர்கள் வந்த நோயைத் தான் குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள், ஆனால் தரையை சுத்தம் செய்யும் நீங்கள் வரப்போகும் நோய்களிடமிருந்து அங்கிருபவர்களை காப்பாற்றும் பெரும் பணி செய்து, பெரிய பங்காற்றுகிறீர்கள் என்று கூறி அந்த ஊழியரை ஆரத் தழுவிக் கொள்வார். தான் செய்யும் பணியின் அர்த்தமும், முக்கியத்துவமும் உணர்ந்து கண் கலங்குவார் அந்த கடைநிலை ஊழியர்.

உங்கள் ஊழியர்கள் கட்டிப்பிடி வைத்தியம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. செய்யும் பணியின் அர்த்தத்தை, அதன் நோக்கத்தை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் படி விளக்குங்கள். அப்படி செய்யும்போது எத்தனை ஆர்வம் குறைவான பணியாக இருந்தாலும் உங்கள் ஊழியர்கள் உத்வேகத்துடன் பணியாற்றுவதைப் பார்ப்பீர்கள். கம்பெனியின் மொத்த பணித்திறன் பரிமளிப்பதை உணர்வீர்கள். அப்புறமென்ன, அடுத்த வசூல்ராஜா நீங்கள் தான்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x