Last Updated : 27 May, 2024 03:32 PM

1  

Published : 27 May 2024 03:32 PM
Last Updated : 27 May 2024 03:32 PM

அனல்மின் நிலையங்களின் தேவைக்காக புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்குகிறது தமிழ்நாடு மின்வாரியம்

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதற்காக புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்குகிறது.

தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், உடன்குடி மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அதிக அளவு தேவைப்படுகிறது. இதற்காக, புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழக மின்வாரியம் வாங்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள சகிகோபால் ககுர்க்கி என்ற புதிய நிலக்கரி சுரங்கரத்தை தமிழக மின்வாரியம் அடுத்த மாதம் வாங்குகிறது. 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தச் சுரங்கத்தில் 4,500 டன் முதல் 5,200 டன் அளவு வரையிலான நிலக்கரி கிடைக்கும்.

இது குறித்து நம்மிடம் பேசிய மின்வாரிய அதிகாரிகள், “மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 103 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியமும் பங்கேற்றது. குறிப்பாக, சகிகோபால் நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்க மின்வாரியம் விண்ணப்பித்தது. இந்த ஏலத்தில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த எந்த மின் நிறுவனமும் பங்கேற்காததால், விதிப்படி இந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தமிழ்நாடு மின்வாரியம் மீண்டும் பங்கேற்றது.

ஆனால், இந்த ஏலத்திலும் வேறு எந்த மாநில மின்நிறுவனங்களும் பங்கேற்கவில்லை. எனினும், ஏல விதிப்படி 2-வது முறை விடப்படும் ஏலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவில்லை எனில், ஏலத்தில் பங்கேற்ற அந்த ஒரு நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அந்த வகையில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சகிகோபால் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு அடுத்த மாதம் செய்யப்படும். இந்த சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x