Published : 14 May 2024 08:15 AM
Last Updated : 14 May 2024 08:15 AM
கோவை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் தினசரி மின் நுகர்வு குறைந்துள்ளது. இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்க மின் கம்பி, மின் மாற்றிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக இவ்வாண்டு தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 454 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்தது. இச்சூழலில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வீடு, அலுவலகங்களில் குளிர் சாதன பெட்டி, மின் விசிறி, ஏர் கூலர் உள்ளிட்ட பல்வேறு மின் சாதன பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளதால் தினசரி மின் நுகர்வும் குறைந்துள்ளது.
தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் கூறியதாவது: மே 12 அன்று தமிழகத்தில் மொத்த மின் நுகர்வு 367 மில்லியன் யூனிட்டாக பதிவாகியுள்ளது. காற்று காலம் தொடங்கியுள்ள போதும் அன்றைய தினம் காற்றாலைகள் மூலம் 4.73 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. சூரியஒளி ஆற்றல் மூலம் 31.8 மில்லியன் யூனிட் கிடைத்தது. விடுமுறை தினமான மே 12-ல் மொத்த மின் நுகர்வு 395.51 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் 367 மில்லியன் யூனிட் மட்டுமே மின்நுகர்வு இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சூரியஒளி மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “மழை பெய்து வருவதால் தினசரி மின்நுகர்வு குறைந்துள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் ஜூன் மாதம் மின்பற்றாக்குறை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறையும். இதனால் குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மின்மிகை மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோடை காலத்தில் அதிகரிக்கும் தினசரி மின் தேவையை பூர்த்தி செய்ய எதிர்வரும் நாட்களில் அவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறும் போது, “மழை சிறிதளவு பெய்தாலே கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு மின்கம்பிகள், மின்மாற்றிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததே காரணம். எனவே, எதிர்வரும் நாட்களில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க பராமரிப்பு பணிகளை சீரான முறையில் மேற்கொள்ள வேண்டும். உதவி செயற் பொறியாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் ஜெயராமன் கூறும்போது, “இந்தாண்டு தினசரி மின்நுகர்வு உயர்ந்தபோதும் மின்தடை அதிகளவு ஏற்படவில்லை. மின்வாரியம் சிறந்த முறையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்றார்.
தமிழ்நாடு மின்வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறும்போது, “கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக காலநிலை முற்றிலும் மாறியுள்ளது. மழை பெய்து வருவதால் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இருப்பினும் பழுது சரிசெய்யப்பட்டு விரைந்து மின் விநியோகம் செய்யப்பட்டது. மழை பெய்யும் போது மின் தடை ஏற்படுவதை தவிர்க்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரச்சினை உள்ள இடங்களில் நுகர்வோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் மரக்கிளைகளை அகற்றுதல், இயந்திரங்கள் பழுதை சீர் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீரான முறையில் மின் விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT