Published : 14 May 2024 05:06 AM
Last Updated : 14 May 2024 05:06 AM
புதுடெல்லி: இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் குங்குமப்பூ அதிக அளவில் விளைகிறது. அதேபோல் மேற்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்த ஈரானிலும் அதிக அளவில் குங்குமப்பூ விளைகிறது. தற்போது மேற்கு ஆசியப் பகுதியில் போர்ப்பதற்றம் நிலவுவதால் இந்திய குங்குமப்பூ விலை 27% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் விளையும், சிறந்த தரமுடைய குங்குமப்பூவின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.3.6 லட்சம் வரை (மொத்த விற்பனை) உள்ளது. முன்பு ஒரு கிலோ இந்திய குங்குமப்பூவின் விலை ரூ.2.8 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருந்தது.
தற்போது குங்குமப்பூவின் விற்பனை விலை 27% கூடியுள்ளது. மொத்த விற்பனையின் கீழ் ரூ.3.5 லட்சம் விற்கும் இந்திய குங்குமப்பூ, சில்லறை விற்பனைக்கு வரும்போது கிலோவுக்கு ரூ.4.95 லட்சமாக உயர்ந்து நிற்கிறது. இது 70 கிராம் எடையுள்ள தங்கத்தின் விலைக்கு ஈடானதாகும் என்று ஜம்மு-காஷ்மீர்குங்குமப் பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரானில் ஆண்டுதோறும் 430 டன் எடையுள்ள குங்குமப்பூ உற்பத்தி செய்யப்படுகிறது. உலக சந்தையில் ஈரானின் குங்குமப்பூவின் பங்கு 90 சதவீதம் ஆகும். இந்த வகை குங்குமப்பூக்கள் உணவின் சுவைக்காகவும், உணவு, மருந்து, அழகு சாதனப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன. ஸ்ரீநகரிலுள்ள அமின்-பின்- காலிக் நிறுவனத்தின் உரிமையாளர் நூர் உல் அமின் பின் கூறும்போது, “உலக குங்குமப்பூ மார்க்கெட்டின் மையம் என்று அழைக்கப்படும் ஈரானிலிருந்து குங்குமப்பூ வருவது நின்றுவிட்டது. இதையடுத்து இந்தியாவில் விளையும் குங்குமப்பூவுக்கு மவுசு கூடியுள்ளது. இதனால் விலை ரூ.3.5 லட்சத்திலிருந்து ரூ.4.95 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஈரானிலிருந்தும் இந்தியா, குங்குமப்பூவை இறக்குமதி செய்து வந்தது. மேற்கு ஆசியாவில் பதற்றமான நிலை இருப்பதால் இங்கு குங்குமப்பூவின் விலை தினந்தோறும் அதிகரித்து வருகிறது என்றார். இந்திய வகையான காஷ்மீர் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு (ஜிஐ) கிடைத்தபோதிலும், கடந்த 13 ஆண்டுகளாக இந்த குங்குமப்பூவின் விலை சரிந்தே இருந்தது.
தற்போது ஆண்டுக்கு இந்தியாவில் 3 டன் மட்டுமே குங்குமப்பூ விளைகிறது. ஆனால் தேவையோ 60 முதல் 65 டன்னாக இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த பெல் சாஃப்ரான் நிறுவனத்தின் இணை நிறுவனர் நிலேஷ் பி. மேத்தா கூறும்போது, “இந்தத் தொழிலில் எங்கள் குடும்பம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், அங்கிருந்து வரும் குங்குமப்பூ வருகை நின்றதுபோன்றவற்றால் இதன் விலை இந்திய மார்க்கெட்டில் அதிகமாக உயர்ந்துவிட்டது.தற்போது புவிசார்குறியீடும் இந்திய வகை குங்குமப்பூக்களுக்கு இருப்பதால் உலக மார்க்கெட்டில் நமது குங்குமப்பூவின் விலையும், தேவையும் அதிகமாக உள்ளது” என்றார்.
குங்குமப்பூ இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நேபாளம், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிராம் குங்குமப்பூவை எடுக்க 160 முதல் 180 குங்குமப்பூ மலர்களில் இருந்து இதழ்களைச் சேகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT