Published : 09 May 2024 04:14 AM
Last Updated : 09 May 2024 04:14 AM
சிவகங்கை: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பணம் செலுத்தியும் பட்டா பெற்று தராமல் சிட்கோ நிறுவனம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வங்கிக் கடன் கிடைக்காமல் அந்நிறுவனங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கையில் தொண்டிச் சாலையில் சிட்கோ தொழிற் பேட்டை 70.61 ஏக்கரில் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு தற்போது பேவர் பிளாக், ஹாலோ பிளாக், பிளாஸ்டிக் பொருட்கள், பீரோ, கட்டில், அட்டைப் பெட்டி தயாரிப்பு உள்ளிட்ட 25-க் கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறு வனங்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வரு கின்றனர். சிட்கோ நிறுவனத்தில் பணம் செலுத்தி மனையிடங்களை தொழில் நிறுவனங்கள் வாங்கின.
10 ஆண்டுகளுக்கு முன்பு மனையிடங்களை வாங்கிய தொழில் நிறுவனங்களுக்கு சிட்கோ நிறுவனம் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது. ஆனால், அந்த இடங்கள் அரசு புறம்போக்கு என இருந்ததால் பட்டா பெற்று தரவில்லை. எனினும், பத்திர ஆவணம் மூலம் தொழில் நிறுவ னங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி வந்தன. தற்போது கடன் வழங்க பட்டாவை வங்கிகள் கட்டாய மாக்கி உள்ளன. ஆனால், சிட்கோ தொழில் நிறுவனங்களிடம் பட்டா இல்லாததால் கடன்பெற முடியாமல் தவித்து வருகின்றன.
இதனால் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், 2020-ம் ஆண்டுக்கு பின்பு சிட்கோ விற்பனை செய்த மனையிடங்கள் அரசு புறம்போக்கு பெயரில் இருப்பதாகவும், மனையிடங்களுக்கு அனுமதி பெறவில்லையெனவும் கூறி பதிவுத்துறை அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்ய மறுத்து வருகின்றனர். இதனால் பணம் செலுத்தி மனையிடங்களை வாங்கிய 15 நிறுவனங்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றன.
இது குறித்து பேவர் பிளாக் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் கூறியதாவது: சிட்கோ வளாகத்தில் தொழில் தொடங்கி 15 ஆண்டுகளாகி விட்டது. மனை யிடத்தை பத்திரப்பதிவு மட்டும் செய்து கொடுத்தனர். இன்னும் அந்த நிலத்தை எங்கள் பெயருக்கு பட்டா பெற்று தரவில்லை. தற்போது வரை இந்த நிலம், அரசு புறம்போக்கு என உள்ளது. அதனால், இந்த நிலத்துக்கு அரசு நிர்ணய மதிப்பு பூஜ்ஜியம் என குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. சென்னை சிட்கோ தலைமை அலுவலகம் வரை அலைந்தும் பயன் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சிட்கோ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சிட்கோவில் உள்ள அனைத்து மனையிடங்களும் அரசு புறம்போக்கு என உள்ளது. அதை சிட்கோ பெயரில் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் பின்பு அந்தந்த நிறுவனங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT