Last Updated : 05 May, 2024 12:12 PM

 

Published : 05 May 2024 12:12 PM
Last Updated : 05 May 2024 12:12 PM

கிருஷ்ணகிரியில் சாலையோர கடைகள் மூலம் மகளிருக்கு ‘கைகொடுக்கும்’ மாம்பழ வர்த்தகம்

காவேரிப்பட்டணம் அருகே கிருஷ்ணகிரி -சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கடையில் மாம்பழம் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெண்.

கிருஷ்ணகிரி: மாம்பழ சீசனை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அதிக அளவில் பெண்கள் மாம்பழ கடைகள் நடத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வருவாய் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மா விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வரும் நிலையில், நிகழாண்டிலும் மழையின்றி, வெயில் தாக்கம் காரணமாக மகசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மானாவாரியில் 90% பாதிப்பு: குறிப்பாக, மானாவாரி சாகுபடியில் 90 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இறவை சாகுபடியில் அறுவடையாகும் மாம்பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

மண்டிகளில் ஏலம் முறையில் மாங்காய்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இதில், உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்று கொள்முதல் செய்கின்றனர். மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் முதல் காரிமங்கலம் வரை சாலையோரத்தின் இருபுறமும் பெண்கள் மற்றும் விவசாயிகள் கடை விரித்து மாம்பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

தனிச்சுவையால் வரவேற்பு: தற்போது, வாட்டும் வெயிலால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய கூலிப் பெண் தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் சாலையோரங்களில் கடை அமைத்துள்ளனர்.இக்கடைகள் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்லும் பயணிகள் வாகனங்களை நிறுத்தி மாம்பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். மகசூல் பாதிப்பு காரணமாக இந்தாண்டு விலை அதிகரித்துள்ளது. இருப்பினும், கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழத்துக்குத் தனிச்சுவை என்பதால், மாம்பழங்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - இது தொடர்பாக பெண் வியாபாரிகள் கூறியதாவது: விவசாய கூலி வேலை இல்லாததால், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்றுக் கடை நடத்தி வருகிறோம். மாம்பழ சீசன் தொடரும் 4 மாதம் எங்கள் வருவாய்க்கு மாம்பழ வர்த்தகம் கைகொடுக்கும். விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து மாம்பழங்களை விற்பனை செய்வதால், முடிந்த வரையில் நுகர்வோருக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக அளவில் சாலையோரங்களில் கடைகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. வெளியூர்களிலிருந்து வரும் நுகர்வோர் மாம்பழ ரகத்தின் பெயரை அறிந்து, அதன் தன்மையை அறிந்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். விலை அதிகரித்தபோதும், நுகர்வு குறையாததால், விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x