Published : 03 May 2024 09:02 AM
Last Updated : 03 May 2024 09:02 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி சீஸன் களை கட்டியுள்ள நிலையில் தோடுடன் உள்ள முந்திரி கிலோ ரூ.100-க்கு குறைவாக விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை உள்ளிட்ட பணப்பயிர்கள், நறுமணப் பயிர்கள் அதிகம் விளைகின்றன. அதே நேரம் தண்ணீர் கிடைக்காத நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும் முந்திரியும் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இதை குமரி மாவட்ட பேச்சு வழக்கில் அண்டி என அழைப்பர்.
வழக்கமாக மரத்தில் இருந்து பறிக்கப்படும் முழு முந்திரி கிலோ ரூ.200-க்கும், உடைத்த முந்திரி பருப்பு கிலோ ரூ.800 வரையும் விற்பனை ஆகும். இந்த மாவட்டத்தில் 300-க்கும்மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகள் உள்ளன. சீஸன் நேரம் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இந்த தொழிற்சாலைகள் செயல்படும்.
செலவு அதிகம் இல்லை: ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதமான கோடைகாலம் முந்திரி சீஸன் காலமாகும். ஆண்டுக்கு இரு மாதங்கள் பலன் தரக்கூடியதாக இருந்தாலும், பிற தோட்ட பயிர்களை போல் செலவு, முதலீடு எதுவும் இதற்குதேவை இல்லை. வறட்சியான நிலங்களிலும் செழிப்பாக வளரும் முந்திரி மரங்கள் கோடை காலத்தில் நல்ல மகசூல் தரும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் வெயில் அதிகமுள்ள இடங்களில் முந்திரி தோட்டங்கள் அதிகம் உள்ளன. தற்போது சீஸன் என்பதால் இந்த தோட்டங்களில் கொத்து கொத்தாக முந்திரியுடன் கொல்லாம் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. மஞ்சள், சிவப்பு, இளம்பச்சை நிறங்களில் கொல்லாம் பழங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. இரவு நேரத்தில் மரங்களின் உயரமான கிளைகளில் உள்ள இந்த பழங்களை வவ்வால்கள் விரும்பி உண்ணும்.
அதே நேரம் அதில் உள்ள முந்திரியை விலங்குகள், பறவைகள் எதுவும் உண்பதில்லை. இதனால் அவை தோட்டத்திலேயே விழுந்து கிடக்கும். எட்டும் உயரத்தில் உள்ளமுந்திரிகளை விவசாயிகள் பறிப்பர்.
தினமும் 200 டன் அறுவடை: குமரி மாவட்டத்தில் தினமும்200 டன்னுக்கு மேல் முந்திரிபறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிராமப் புறங்களில் உள்ள கடைகள் முதல் பெரிய சந்தைகள் வரை முந்திரியை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தற்போது அதிக மகசூல்உள்ளதால் விலை சரிந்துள்ளது. தோடுடன் கிலோ ரூ.95-க்கு மட்டுமேகொள்முதல் செய்யப்படுகிறது.
இது குறித்து முந்திரி விவசாயிகள் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியான பகுதிகளில் நட்ட முந்திரிமரங்கள் முதல் 10 ஆண்டுகளுக்குள் உள்ள மரங்கள் வரை நல்ல மகசூல் தருகின்றன. பனை மரத்தைபோன்றே முந்திரி தோட்டத்தை பராமரிக்க செலவு அதிகம் இல்லை. கோடையில் இரு மாதத்தில் மகசூல் கிடைத்தாலும் அது விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தான்.
முந்திரி சீஸன் இல்லாத காலங்களில் இலங்கை, பர்மா மற்றும் வெளி நாடுகளில் இருந்து முந்திரி இறக்குமதி ஆகிறது. இதுபோல் தற்போது சீஸன் நேரத்திலும் பல டன் முந்திரி கப்பல் மூலம் இங்குள்ள முந்திரி ஆலைகளுக்கு வந்திறங்குகின்றன. இதனால் உள்ளூர் முந்திரிக்கு பெரிய வரவேற்பு இல்லை.
ஆனால் குமரியில் கிடைக்கும் முந்திரி பருப்புக்கு தனி சுவை இருப்பதால் இதை குடிசை தொழிலாக செய்வோர் உள்ளூர் முந்திரியையே வாங்கி பயன்படுத்துகின்றனர். முந்திரியுடன் கிடைக்கும் கொல்லாம் பழமும் வித்தியாசமான சுவை என்பதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.
தற்போது தோடுடன் முந்திரியை கிலோ 95-க்கு வாங்குவதால் பெரிய வருவாய் இல்லை. முந்திரி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு விவசாயிகளிடம் இருந்துகிலோ ரூ.200-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT