Published : 03 May 2024 04:04 AM
Last Updated : 03 May 2024 04:04 AM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் நுகர்வும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் நெல், ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகக் காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் சாகுபடி: வழக்கமாக சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளரிக்காயை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வரும் நிலையில், வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் பருவ காலத்துக்கு ஏற்ப காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
அதன்படி வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி, அலேகுந்தாணி, பண்ணப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெள்ளரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளரிக்காய் நுகர்வு அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா செல்கிறது - இது தொடர்பாக அலேகுந்தாணியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்நிலையில், கிணறுகளில் இருக்கும் குறைந்தளவு நீர் ஆதாரம் மூலம் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, கொடிகளில் காய்கள் அதிகளவில் வந்துள்ளன.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களை சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். அங்குள்ள சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து மொத்தமாக விலை பேசி வாங்கிச் செல்கின்றனர்.
கை கொடுத்த வெள்ளரி: வெள்ளரிக்காய் தரத்தைப் பொறுத்து கிலோ ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர். வெளிச் சந்தையில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படு கிறது. கடும் வெயிலின் காரணமாக வெள்ளரிக்காய் நுகர்வு, விலை அதிகரித்துள்ளதால் இந்தாண்டு வெள்ளரி சாகுபடி எங்களுக்குக் கைகொடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT