Published : 01 May 2024 02:10 PM
Last Updated : 01 May 2024 02:10 PM
புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.43,846 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ரூ.53,538 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,623 கோடியும், செஸ் வரி ரூ.13,260 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.
உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல் வரலாறு காணாத வகையில் அதிகமாக இருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலங்கள் வாரியாக...: மாநிலங்கள் வாரியாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ரூ.37,671 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் ரூ.15,978 கோடியும், குஜராத்தில் 13,301 கோடியும், உத்தரபிரதேசத்தில் ரூ.12,290 கோடியும் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
இதற்கடுத்த இடத்தில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் தமிழகத்தில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT