Published : 26 Apr 2018 09:08 AM
Last Updated : 26 Apr 2018 09:08 AM
மத்திய அரசின் சிட்டா நூல் உற்பத்திக் கொள்கையால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நூற்பாலைகள், 10 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இந்தியாவில் பஞ்சிலிருந்து நூலைத் தயாரிக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன. நாட்டில் உள்ள 5.5 கோடி கதிர்களில் (ஸ்பிண்டில்) 40 சதவீதம், அதாவது 2.10 கோடி கதிர்கள் தமிழகத்தில் உள்ளன.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,200 நூற்பாலைகளில், சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நூல் தயாரிக்கப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
தறிகளுக்கு உபயோகப்படுத்தும் நூல், கோன் வடிவில் உற்பத்தி செய்யப்படும். இதில் கைத்தறிகளில் பயன்படுத்தும் நூலை சிட்டா நூலாக (ஹேங்க் யார்ன்) உற்பத்தி செய்வர். கைத்தறித் துறைக்கு தேவையான நூல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 1974-ம் ஆண்டு சிட்டா நூல் கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஸ்பின்னிங் மில்களில் 50 சதவீதம் சிட்டா நூல் கட்டாயம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2003-ல் இது 40 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கைத்தறிகள் பெரிதும் குறைந்து விட்ட தற்போதைய சூழலில், சிட்டா நூல் கட்டாய உற்பத்தியால் நூற்பாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு இந்த பிரச்சினை நூற்பாலைகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பிரபு தாமோதரன் 'தி இந்து'விடம் கூறியதாவது: இந்தியாவில் முன்பு கைத்தறிகள் அதிகம் இருந்தன. இதனால் கைத்தறித் துறைக்கு நூல் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு சிட்டா நூல் கொள்கையை அறிமுகப்படுத்தியது. எனினும், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விசைத்தறிகள் மற்றும் நவீன நாடா இல்லா தறிகள் (ஆட்டோ லூம்) அதிகமாகின. இதனால், கைத்தறிகளின் பயன்பாடு வெகுவாகக் குறையத் தொடங்கியது.
1987-88-ம் ஆண்டில் 36 லட்சம் கைத்தறிகள் இருந்தன. 1995-96-ல் இது 31 லட்சமாகவும், 2010-ம் ஆண்டில் 21 லட்சமாகவும் குறைந்துவிட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கைத்தறிகளின் எண்ணிக்கை இன்னும் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதே சமயம், நூல் உற்பத்தி பெரிதும் அதிகரித்துள்ளது. 1987-88-ல் 1321 மில்லியன் கிலோவாக இருந்த நூல் உற்பத்தி, 2010-ல் 3079 மில்லியன் கிலோவாகவும், 2016-17-ல் 4061 மில்லியன் கிலோவாகவும் அதிகரித்துவிட்டது. இதில் கைத்தறிக்காக 40 சதவீத சிட்டா நூலைத் தயாரிக்க வேண்டுமென்ற விதிமுறை, நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது.
10 சதவீதமாக குறைக்கப்படுமா?
கைத்தறிகள் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், தறிகளுக்கான வார்ப் நூல்களைத் தயாரிக்கும் நூற்பாலைகள், 40 சதவீத சிட்டா நூலை யாரிடம் விற்கும்? மேலும், 40 சதவீதம் சிட்டா நூலை தயாரிக்காவிட்டால், அரசின் நடவடிக்கைக்கும் உள்ளாக நேரிடும். எனவே, 40 சதவீதம் என்பதை, 10 சதவீதமாக குறைக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ஜிஎஸ்டிக்கு பிறகு, 100 சதவீத வர்த்தகம் கணினிமயமாக்கப்பட்டு, வரி விதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்டாய சிட்டா நூல் உற்பத்தி, நூற்பாலைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு வணிகத்தின் நலனைக் காப்பதற்காக, பல்வேறு கொள்கைகளை தளர்த்தி, நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளது. மத்திய அரசின் `மேக் இன் இந்தியா' திட்டத்திலும், வர்த்தக நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடைமுறைக்கு ஒத்துவராத கட்டாய சிட்டா நூல் உற்பத்திக் கொள்கையை மாற்ற, மத்திய அரசு முன்வர வேண்டும்.
இது தொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் மற்றும் ஜவுளித் துறை செயலருக்கு, இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு சார்பில் மனு அனுப்பியுள்ளோம். அது தவிர, 450-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் சார்பில் தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே நூற்பாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த நிலையில் தங்களது 10 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற மத்திய ஜவுளி அமைச்சகம் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT