Published : 26 Apr 2024 05:30 PM
Last Updated : 26 Apr 2024 05:30 PM
பெங்களூரு: மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்குவதை நிலுவையில் வைத்துள்ளது.
கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு (முன்பு ட்விட்டர்) எதிரான கருத்துகள் வலுவாக எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. எக்ஸ் தளத்தை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த 2022-ம் ஆண்டு இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அந்த ஆண்டு ஜூலையில் 94 லட்சம் ஆக்டிவ் பயனர்களை ‘கூ’ கொண்டிருந்தது.
இந்த நிலையில், படிப்படியாக பயனர்களின் எண்ணிக்கை தொடர் சரிவை கண்டுள்ளது. மாதந்தோறும் இது குறைந்து கொண்டே வந்தது. இதனால் நிலையான வருவாயை அந்நிறுவனம் ஈட்ட தவறியது. இந்த நிலையில்தான் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பளம் வழங்கவில்லை என்ற தகவல் வெளியானது. இதனை ‘கூ’ தரப்பும் உறுதி செய்துள்ளது.
புதிதாக மூலதனத்தை திரட்டும் நோக்கில் பார்ட்னர்ஷிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அது இறுதி செய்யப்பட்டதும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் தரப்பில் எடுத்து கூறப்பட்டுள்ளதாக தகவல். மேலும், இதனால் தங்கள் தளத்தின் இயக்கம் மற்றும் செயல்பாடு முடங்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளது.
தற்போது அந்நிறுவனத்தில் வெறும் 60 முதல் 70 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனராம். கடந்த 2023 ஏப்ரலில் சுமார் 260 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த 2022-ல் அதிக பயனர்களை கொண்டிருந்த போது ஊழியர்களின் எண்ணிக்கை இதைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்கள் வசமிருந்து இதுவரை 6.50 கோடி டாலர்களை இதுநாள் வரையில் திரட்டியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக தளத்தின் இயக்கம் மற்றும் பயனர் சப்போர்ட் சார்ந்து ‘கூ’ நிறுவனம் எப்படி செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 2019-ல் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT