Published : 22 Apr 2024 04:04 AM
Last Updated : 22 Apr 2024 04:04 AM

வணிகர் உரிமம் பெற எளிமையான நடைமுறை: விக்கிரமராஜா கோரிக்கை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில், அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

ஈரோடு: வணிகர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் ஈரோட்டில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது: எங்களது அமைப்பின் 41-வது மாநில மாநாடு மே 5-ம் தேதி மதுரையில் நடக்கிறது. வணிகர்களைப் பாதிக்கும் பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு முக்கிய தீர்மானத்தை இந்த மாநாட்டில் நிறைவேற்ற உள்ளோம். பெரு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் நேர்மையாக வணிகம் செய்வது இல்லை. தரம் குறைவான பொருட்களை, விலை குறைத்து அவர்கள் விற்பனை செய்வதை நாங்கள் எதிர்கிறோம்.

வணிகர்களை பாதிக்கும் ஜிஎஸ்டி நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது, வணிகர்கள், பொதுமக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும். வணிகர்களுக்கு மூன்றாண்டுக் கான உரிமம் வழங்குவதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். வணிகர் உரிமம் பெறுவதற்கான நடைமுறை களை எளிமையாக்குவதுடன், மே 5-ம் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவித்து, அரசு விடுமுறை அளிக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் சண்முக வேல், ராமச் சந்திரன், உதயம் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தில், அதன் மாநில தலைவர் விக்கிரம ராஜா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x