Published : 04 Apr 2018 09:48 AM
Last Updated : 04 Apr 2018 09:48 AM
தொ
ழிலுக்கான முதலீட்டை திரட்டுவது அவ்வளவு கஷ்டம் அல்ல. அதே சமயத்தில் எளிதானதும் அல்ல. சரியான நோக்கமும், திட்டமிடலும் இருக்கும் பட்சத்தில் முதலீட்டை திரட்டுவது எளிதுதான். பெரு நகரங்களில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு நிதி திரட்டுவது கடினமான விஷயமாக இருந்தாலும், அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்கோ அல்லது உரையாடுவதற்கோ வாய்ப்புகள் குறைவு. இந்த குறையை களைவதற்காக `டை கோவை’ அமைப்பு கோவையில் முதலீட்டு திருவிழாவை நடத்தியது. இந்த நேர் காணலை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
101 தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டாலும் குறைந்த பட்சம் 20 நபர்களுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என டை கோவை அமைப்பின் தலைவர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு குறித்து அவர் கூறுகையில், 750-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இதில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். ஆனால் முதற் கட்டமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து இறுதிகட்ட நேர்காணலுக்கு 101 தொழில்முனைவோர்கள் அழைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் முதலீட்டாளர்களிடம் தங்களின் திட்டம் குறித்து விவரித்தனர் என்று குறிப்பிட்டார்.
இறுதிகட்ட நேர்காணல் முடிந்தாலும் உடனடியாக நிதி கிடைக்காது. வாய்ப்பு இருக்கும் தொழில் திட்டத்தை மீண்டும் ஒருமுறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இதன் பிறகே முதலீடு செய்யப்படும். அதனால் தொழில்முனைவோர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பதை தற்போது விரிவாக வெளியிட முடியாது. ஆனால் அந்த உரையாடலில் இருந்து முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் தேவை என்ன, எப்படி அவர்களிடம் உரையாடுவது, தொழில்முனைவோர்கள் எந்த அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்த புரிதல் நமக்கு கிடைத்தது. அவை இதோ!
பிரச்சினை என்ன?
முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது மிகப்பெரிய பிரச்சினைக்கான தீர்வு, வழக்கமான வியாபாரம் அல்ல. ஒரு புதிய பிரச்சினைக்கான தீர்வினை கண்டுபிடிக்கும் போது அது தொழிலுக்கான வாய்ப்பாக மாறும். அதே சமயத்தில் அந்த தீர்வின் மூலம் மிகப்பெரிய பலன் இருக்க வேண்டும். அந்த பிரச்சினையின் தீர்வு பலருக்கு சாதகமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு சுற்றுலா செல்வதற்கான பஸ் மற்றும் டெம்போ டிராவல் வாகனங்களை செயலி மூலம் ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை சில தொழில்முனைவோர்கள் இணைந்து (புரிதலுக்காக: ஓலா மற்றும் உபெரின் பஸ் வடிவம்) தொடங்கி இருக்கிறார்கள். இது நல்ல தீர்வுதான். ஆனால் இதனால் கிடைக்கக் கூடிய பயன் என்பது மிகவும் குறைவு. சராசரியாக ஓலாவை வாரம் ஒரு முறையாவது பயன்படுத்துவார்கள், ஆனால் உங்கள் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவார்கள் என முதலீட்டாளர்கள் கேட்டனர். அதனால் பிரச்சினைகளை உற்று நோக்குங்கள். பெரிய வாய்ப்பு இருக்கும் பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள்.
ஐடியாவுக்கு மட்டும் பணமில்லை
தொழிலுக்கு பணம் தேவையில்லை, ஐடியா மட்டுமே போதுமானது என்பதை பலர் சொல்லக்கேட்டிருப்பீர்கள். ஆனால் ஐடியா மட்டுமே போதுமானது அல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பது சிறப்பான ஐடியாவாக இருக்கலாம். அது வெற்றிபெறும் என்றும் முதலீட்டாளர்களும் நினைக்கலாம். ஆனால் அந்த புராடக்டை சந்தைப்படுத்தி அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்துதான் முதலீடு கிடைக்கும். உங்களின் சிறப்பான புராடக்டுக்கு சந்தையில் வரவேற்பு இல்லை எனும் பட்சத்தில் முதலீடு வீணாகுமே என்பது முதலீட்டாளர்களின் வாதம்.
லிப்ட் எவ்வளவு நேரம் இயங்குகிறது, லிப்டில் உள்ள கம்பியின் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்குவோம் என முதலீட்டாளர்கள் கூறிவிட்டனர்.
தேவைப்பட்டால் கடன்!
தொழில்முனைவோருக்கு தேவை கடனா அல்லது முதலீடா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். முதலீடு என்னும் பட்சத்தில் உங்கள் நிறுவனத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்க வேண்டும். பங்குகளை விற்று நிதி திரட்ட வேண்டுமா என்பதை யோசிக்க வேண்டும். புதுமையான தொழில் என்றாலும் அதற்கு பெரிய சந்தை இருக்காது. சிறிய அளவில் இருக்கும் போது வங்கிக் கடன் வாங்கிக்கொள்ளுங்கள் என முதலீட்டாளரே ஆலோசனை வழங்கினார்கள். கேழ்வரகினை எளிதில் சமைப்பதற்கு ஏதுவான கண்டு பிடிப்பை ஒரு பெண் தொழில்முனைவோர் கண்டுபிடித் திருந்தார்.
`சில லட்ச ரூபாயில் இயந்திரங்கள் வாங்கினாலே தொழில் தொடங்க முடியும். தவிர பெண்களுக்கு சலுகைகள் இருக்கிறது. அதனால் கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்திய பிறகு அடுத்த கட்ட தேவைக்கு நிதி திரட்டலாம் என முதலீட்டாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள். அதாவது தொழிலுக்கு வங்கியில் கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தை அதனை தவிர்க்க வேண்டாம் என்பதே முதலீட்டாளர்களின் ஆலோசனை.
பெரிய திட்டத்துக்கு நோ!
ஒரு தொழில் தொடங்க அதிக காலம் எடுத்துக்கொள்ளும் நிறுவனத்துக்கு முதலீடு கிடைப்பது கடினம். அதாவது மொத்த திட்டமும் பேப்பரில் இருக்கும். நிதி திரட்டி, ஆராய்ச்சி செய்து, கட்டுமானத்தை உருவாக்கி அதன் பிறகு சந்தைக்கு செல்லும் வகையில் மொத்த திட்டமும் காகிதத்தில் இருந்தால் நிதி கிடைப்பது கஷ்டம். ஏனெனில் நிதி கிடைத்த பிறகு கூட இறுதி புராடக்ட் வெளிவர சில ஆண்டுகள் ஆகலாம் என்றால் முதலீட்டாளர்கள் அந்த ரிஸ்கினை எடுக்க மாட்டார்கள். நிகழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த ஒரு தொழில்முனைவோரின் திட்ட தியரி சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் வெற்றியடைய சில ஆண்டுகள் ஆகலாம்.
நிதி கவனம்
பெரும்பாலான தொழில்முனைவோர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. தற்போது இவ்வளவு வருமானம் கிடைக்கிறது. குறிப்பிட்ட தொகை கிடைத்தால், இன்னும் சில ஆண்டுகளில் இவ்வளவு வருமானம் கிடைக்கும் என்னும் திட்டம் இல்லை. தவிர நீங்கள் உருவாக்கும் பொருளுக்கு எவ்வளவு சந்தை இருக்கிறது. எவ்வளவு சந்தையை கைப்பற்ற முடியும் என்பதுதான் முதலீட்டாளர்களின் முக்கிய கேள்வி.
இந்த கேள்விக்கான பதிலுடன் முதலீட்டாளரை அணுகுவது முக்கியம். மேலும் முதலீட்டாளர்களுக்கு எவ்வளவு பங்குகள் கொடுப்பீர்கள் என்னும் கேள்விக்கு பல தொழில் முனைவோர்களிடம் பதிலில்லை. இவ்வளவு முதலீடு செய்தால், இத்தனை சதவீத பங்குகள் கொடுக்கப்படும், குறிப்பிட்ட காலத்தில் இவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்னும் கணிப்புகளுடன் முதலீட்டாளர்களை அணுகுவது நல்லது. முதலீட்டாளர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை சொல்லாத பட்சத்தில் முதலீடு எப்படி கிடைக்கும்.
இன்னும் சில வாரங்களில் முதலீட்டு திருவிழாவில் எந்தெந்த தொழில்முனைவோருக்கு முதலீடு கிடைத்தது என்னும் தகவல் வெளியாகும். அப்போது தொழில்முனைவோர்களின் அனுபவங்கள் குறித்து பார்க்கலாம்.
karthikeyan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT