Published : 15 Apr 2024 05:13 AM
Last Updated : 15 Apr 2024 05:13 AM
சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து, ரூ.54,840 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, 2023 அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்ற அளவில் விற்பனையானது. இதன் பிறகு, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 எனும் புதிய உச்சத்தை அடைந்தது.
கடந்த மாதம் தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதன்படி, மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அப்போதிருந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே உள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஒரு பவுன் ரூ.52,920-க்கு விற்கப்பட்டது. பின்னர், நாளுக்கு நாள் உயர்ந்து, 12-ம் தேதிரூ.54,440 ஆக அதிகரித்தது. இந்த 5 நாட்களுமே தங்கம் விலை தொடர்ச்சியாக புதிய உச்சத்தை அடைந்தது.
நேற்று முன்தினம் (ஏப்.13) விலை சற்று குறைந்தது.இந்நிலையில், வெகு நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,780, ஒரு பவுன் ரூ.54,240 என விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரு கிராமுக்கு ரூ.75 எனபவுனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம்ரூ.6,855-க்கும், ஒரு பவுன் ரூ.54,840-க்கும் விற்பனையானது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.7,325, ஒரு பவுன்ரூ.58,600 என விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.89, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.89,000 என்ற விலையே நேற்றும் நீடித்தது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியபோது, ‘‘சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கிறது. தங்கம் மீதான முதலீடு காரணமாக தேவை அதிகரிக்கிறது. உள்ளூர் சந்தையிலும், வெளி சந்தையிலும் மக்கள் போட்டி போட்டு தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
இதனால், விலை உயர்ந்து வருகிறது. வழக்கமாக சனிக்கிழமை நிர்ணயிக்கப்படும் விலையே ஞாயிறும் தொடரும். வெகு மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். ஒரு சில நாட்களுக்கு இந்த விலை உயர்வு காணப்படும். ஏப்ரல் 15-ல் (இன்று) பவுன் விலை ரூ.55 ஆயிரத்தை கடக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT