Published : 11 Apr 2024 11:33 AM
Last Updated : 11 Apr 2024 11:33 AM
மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்யாததால், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், 6 மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய 13 அணைகள் உள்ளன. அதில், குந்தா, கெத்தை, பரளி, பில்லூர், அவலாஞ்சி, காட்டுக் குப்பை என 6 மின்நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம் என 6 மின் நிலையங்கள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள 12 மின் நிலையங்களில் மொத்தம் 833.65 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு பருவ மழை பொய்த்த நிலையில், அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளில் 20 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. குந்தா வட்டத்தில் 184 அடிகொண்ட எமரால்டு அணை,171 அடி கொண்ட அவலாஞ்சி அணை, 210 அடி கொண்ட அப்பர்பவானி அணைகள் பெரிய அணையாகவும், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படுகிறது.
இந்த அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால், காட்டு குப்பை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மீதமுள்ள மின்நிலையங்கள் மூலம் தினசரி 150 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, மாவட்டங்களுக்கு பிரித்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. மின் உற்பத்தி படிப்படியாக குறைந்ததால், கோவை உட்பட பல்வேறு தொழில் நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து குந்தா மின்வாரிய மேற்பார்வை செயற் பொறியாளர் பிரேம் குமார் கூறியதாவது: கடந்தாண்டு பருவமழை பொய்த்து, அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. நடப்பாண்டும் இதுவரை மழைப் பொழிவு இல்லை. ‘பீக் ஹவர்’ எனப்படும் காலை 6 மணி முதல் 9 மணி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. சில அணைகளில் தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. மழை வந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டில் அணைகளில் 80 சதவீதத்துக்கு தண்ணீர் இருப்பு இருந்ததால், தினமும் சராசரியாக 650 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் பட்டது. கடந்தாண்டு பருவ மழை பொய்த்ததால், ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சராசரியாக 450 மெகா வாட் மற்றும் செப்டம்பர் முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரை சராசரியாக 200 மெகா வாட் வரை மட்டும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT