Published : 06 Apr 2024 06:24 AM
Last Updated : 06 Apr 2024 06:24 AM
கிருஷ்ணகிரி: ரம்ஜான், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.14 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. தேர்தல் விதிமுறையால், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை நடந்தது.
கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில் யுகாதி பண்டிகை வரும் 9-ம் தேதி கொண்டாப்படுகிறது. இதேபோல் அரியக்கா, பெரியக்கா கோயில் திருவிழாவும் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. மேலும், வரும் 11-ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டப்படுகிறது.
50 ஆயிரம் ஆடுகள்: இதனால் நேற்று குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை 2 மடங்கு கூடுதலாக விற்பனையானது. ஆடுகள் வாங்கவும், விற்பனை செய்யவும், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.12 ஆயிரம் முதல், ரூ.15 ஆயிரம் வரை விலை போனது. இதேபோல் எடைக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
ரூ.2 ஆயிரம் விலை அதிகரிப்பு: நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை ஆனதால் ரூ.14 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வழக்கத்தை விட ஒரு ஆட்டின் விலை ரூ.2 ஆயிரம் கூடுதலாக விற்பனையானதால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் ஆட்டிறைச்சியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை: மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை செய்த விவசாயிகளுக்கு, வியாபாரிகள் பலர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் பணத்தை பரிமாறிக் கொண்டனர்.
நேற்று நடந்த வாரச்சந்தைக்கு வாகனங்களில் ஆடுகள் மற்றும் மாடுகளை கொண்டு வந்ததால், 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சந்தையை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனதாக, வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியுடன் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT