Published : 03 Apr 2024 02:29 PM
Last Updated : 03 Apr 2024 02:29 PM
மும்பை: 2024-ஆம் ஆண்டின் 200 இந்திய கோடீஸ்வர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடமும், கவுதம் அதானி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் சுமார் 200 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 169 பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்த மதிப்பு சுமார் 954 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு சொத்து மதிப்பை (675 பில்லியன் டாலர்கள்) விட 41 சதவீதம் அதிகமாகும்.
இந்தப் பட்டியலில் 116 பில்லியன் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். உலக அளவில் இவர் 9-வது இடத்தில் இருக்கிறார். 100 பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த முதல் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானிக்கு அடுத்து, 84 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தில் இந்தியாவின் கோடீஸ்வர பெண்மணியாக அறியப்படும் சாவித்ரி ஜிண்டால் 33.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்தவர்.
இந்தப் பட்டியலில் நரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன் மற்றும் ரேணுகா ஜக்தியானி உள்ளிட்ட 25 புதிய கோடீஸ்வரர்களும் இணைந்துள்ளனர். அதே வேளையில், பைஜு ரவீந்திரன், ரோஹிகா மிஸ்த்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை. இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள்:
முகேஷ் அம்பானி - 116 பில்லியன் டாலர்கள் சொத்து
கவுதம் அதானி - 84 பில்லியன் டாலர்கள்
ஷிவ் நாடார் - 36.9 பில்லியன் டாலர்கள்
சாவித்ரி ஜிண்டால் - 33.5 பில்லியன் டாலர்கள்
திலீப் ஷங்வி - 26.7 பில்லியன் டாலர்கள்
சைரஸ் பூனவாலா - 21.3 பில்லியன் டாலர்கள்
குஷால் பால் சிங் - 20.9 பில்லியன் டாலர்கள்
குமார் பிர்லா - 19.7 பில்லியன் டாலர்கள்
ராதாகிஷன் தமானி - 17.6 பில்லியன் டாலர்கள்
லட்சுமி மிட்டல் - 16.4 பில்லியன் டாலர்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT