Published : 03 Apr 2024 06:33 AM
Last Updated : 03 Apr 2024 06:33 AM
புதுடெல்லி: பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தை தொடங்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளை அறிமுகம் செய்தது.
இதுதொடர்பாக பதஞ்சலி வெளியிட்ட விளம்பரத்தில், “அலோபதி மருத்துவத்தில் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. எங்களது ஆயுர்வேத மருந்துகள் மூலம் கரோனா, சர்க்கரை நோய்,ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்களை வெளியிடுவதை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிறுவனம் அடுத்தடுத்து விளம்பரங்களை வெளியிட்டது. இதையடுத்து பதஞ்சலி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுதுல்லா அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பதஞ்சலி மற்றும் அதன் நிறுவனர்கள் பாலகிருஷ்ணா, பாபா ராம்தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பல்வீர் சிங், விபின் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “பிரமாண பத்திரம் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. பாலகிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் எங்கே’’ என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து இருவரும் நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘தவறான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 24 மணி நேரத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மீண்டும் அதேவிளம்பரத்தை பதஞ்சலி வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கண்ணை மூடிக் கொண்டு இருந்தது ஏன்? இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்படாதது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரானசொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா கூறும்போது, “நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இந்த பிரச்சினையில் சுமுக தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
இறுதியில் நீதிபதிகள் கூறும்போது, “பாலகிருஷ்ணாவும் பாபாராம்தேவும் உதட்டளவில் மன்னிப்பு கோரியுள்ளனர். இதை ஏற்க முடியாது. இருவரும் ஒரு வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT