Published : 03 Apr 2024 06:45 AM
Last Updated : 03 Apr 2024 06:45 AM
புதுடெல்லி: இந்தியாவின் ராணுவத் தளவாடஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது. ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் ராணுவத் தளவாட தயாரிப்பில் இறங்கின. எளிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் விதிகள் தளர்த்தப்பட்டன.
இதன் பலனாக ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 60%, பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பு 40% ஆக உள்ளன. சில தயாரிப்புகளில் இரண்டும் இணைந்து செயல்படுகின்றன. இந்திய ராணுவத் தளவாடங்களை சந்தைப்படுத்த கண்காட்சிகளும் நடத்தப்பட்டன. இதன் மூலம் இந்திய ராணுவத் தளவாட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உலக நாடுகளைச் சென்றடைந்தன.
இந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ராணுவத் தளவாட ஏற்றுமதியை ஒப்பிட்டு பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ராணுவத் தளவாட ஏற்றுதி 21 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2004-2014-ம் ஆண்டுகளில் ரூ.4,312 கோடிக்கு ராணுவத்தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் கடந்த 2014-24-ம்ஆண்டுகளில் மொத்தம் ரூ.88,319 கோடி அளவுக்கு ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நாட்டின் ராணுவத் தளவாட ஏற்றுமதி ரூ.15,920 கோடியாக இருந்தது. ஆனால் 2023-24-ம் நிதியாண்டில் இது 32.5% அதிகரித்து ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில்பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவில் ரூ.21,000 கோடியை தாண்டியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தகவலில், ‘‘பாதுகாப்புத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த முக்கியமான சாதனையை, நாட்டின் திறன்கள் வளர்ச்சியின் வெளிப்பாடாக கொண்டாடுகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT