Published : 30 Mar 2024 07:07 PM
Last Updated : 30 Mar 2024 07:07 PM

இத்தாலியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா - இந்தியா பங்கேற்பு

ரோம்: சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு நிறைவு விழா, இத்தாலியின் ரோமில் உள்ள உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் துறையின் கூடுதல் செயலாளர் மணீந்தர் கவுர் திவேதி கலந்து கொண்டு சிறுதானியங்கள் தொடர்பான இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்துரைத்தார்.

உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான எஃப்ஏஒ (FAO), சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு (IYM) -2023-ன் நிறைவு விழாவை இத்தாலியின் ரோமில் உள்ள எஃப்ஏஒ தலைமையகத்தில் நேற்று கொண்டாடியது. நேரிலும் காணொலி முறையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் மணீந்தர் கவுர் திவேதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய மத்திய அரசின் வேளாண்துறை கூடுதல் செயலாளர் மணீந்தர் கவுர் திவிவேதி, சிறுதானியங்களின் ஊக்குவிப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இந்தியாவின் செயல்பாட்டை எடுத்துரைத்தார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யு தமது தொடக்க உரையில், சிறுதானியம் தொடர்பான முன்முயற்சிகளை முன்னெடுப்பதில் சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதில் சிறுதானியங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார்.

பல்வேறு நாடுகளில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023-ன் போது ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் வகையிலான வீடியோவும் இந்த நிகழ்ச்சியின்போது திரையிடப்பட்டது.

சர்வதேச சிறுதானிய ஆண்டின் வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் பெத் பெக்டோலின் நிறைவுரையாற்றினார்.

உலகெங்கிலும் உள்ள சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட உணவு வகைகளின் காட்சிப்படுத்தல் மற்றும் நேரடி சமையல் ஆகியவற்றைக் கொண்ட சிறப்பு கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவின் முன்மொழிவைத் தொடர்ந்து, 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, மார்ச் 2021-ல் அதன் 75 வது அமர்வில், 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது. சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள், குறித்த விழிப்புணர்வு 2023-ம் ஆண்டு முழுவதும் ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x