Published : 27 Feb 2018 08:20 AM
Last Updated : 27 Feb 2018 08:20 AM
ஜா
க் மா அடிக்கடி கனவுகள் காண்பார். இவை, அப் துல் கலாம் சொன்ன வாழ்க்கைக் கனவுகளல்ல, விசித்திரமான கனவுகள். ஆசிரியராக இருந்தபோது, அவர் தன் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்ட இரண்டு கனவுகள் இவை;
1.மரத்தின் கீழே விழுந்துகிடக்கும் வைக்கோலில் என் சக்தியைச் செலுத்துகிறேன். கையை அசைக்கிறேன். வைக்கோல் மரத்தைப் பிளந்துகொண்டு பாய்கிறது. எல்லோரும் என்னை ஆச்சரியத்தோடு பார்க்கி றார்கள்.
2. ஹாங்ஸெள நகரத்தின் முக்கிய வீதி. எல்லோரும் கோட், சூட் அணிந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். ஜாக் மா என்ட்ரி. வெள்ளைப் பட்டில் சீனப் பேரரசர்கள் அணிவதுபோல் தோள் தொடங்கிக் கால் வரை மறைக்கும் பாரம்பரிய அங்கி. கூலிங் கிளாஸ். பந்தாவாக ஸ்டைல் நடை போட்டு வருகிறார். இரு பக்கமும் அவரைவிட உயரமான இரண்டு பெண் கறுப்புப் பூனைகள். அந்தப் பெண்களிடம் வாய் திறந்து கட்டளையிடுவது கூட, தன் தகுதிக்குக் குறைச்சல் என்பதுபோல் இடது கையை நீட்டுகிறார். கறுப்புப் பூனைப் பெண்கள் இதற்குப் பழக்கப்பட்டவர்கள். ஆகவே, ஒரு பெண் Pancake என்னும் இனிப்புப் பணியாரத்தைக் கையில் வைக்கிறார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மூன்று வேளையும் சாப்பிடும் கோடீஸ்வரர் போல் ஜாக் மா ஸ்டைலாக மூன்று கடி கடிக்கிறார். மிச்சத்தை, அஷ்வின் ஸ்பின் பெளலிங் போல் விரல்களால் சுண்டி எறிகிறார். இப்போது வலது கை நீள்கிறது. இரண்டாவது கறுப்புப் பூனை விலை உயர்ந்த சுருட்டை அங்கே வைக்கிறார். தீக்குச்சி சரக். சுருட்டு நுனியில் நெருப்பு. ஜாக் மா சில இழுப்புகள். சுற்றிலும் பச்சை நிறப் புகை மண்டலம். சுருட்டு நுனியில் சாம்பல் தொக்கி நிற்கிறது. அதைத் தட்டவேண்டும். பெண் கையை நீட்டுகிறாள். சுருட்டை அவள் உள்ளங்கையில் சுழற்றுகிறார். அணைகிறது. அந்தப் பெண் கை தட்டுகிறாள். அவள் கையில் நெருப்புக் காயத்தின் அடையாளமே இல்லை. வீதியில் இருக்கும் எல்லோர் முகங்களிலும் மேஜிக் ஷோ பார்த்த பிரமிப்பு.
கனவுகள் ஆழ்மன ஆசைகளின் வெளிப்பாடுகள் என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அது என்ன ஆழ்மனம், ஆழமில்லாத மனம்? உளவியல் சித்தாந்தப்படி, நம் எல்லோருக்குள்ளும் உணர்வு மனம், ஆழ்மனம் என இரண்டு மனங்கள் இருக்கின்றன. இவை இரண்டும் தனிப்பட்ட மனங்கள் அல்ல, மனத்தின் மாறுபட்ட இரண்டு செயல்பாடுகள்.
நாம் சாதாரணமாக மனசாட்சி என்று சொல்வது உணர்வு மனதைத்தான். சினிமாக்களில் பார்த்திருப்பீர்களே? ஹீரோ நல்லவன். கண் பார்வை இழந்த தங்கையின் அறுவை சிகிச்சைக்காகப் பணம் வேண்டும்; அல்லது அம்மாவுக்கு லிம்போ சர்க்கோமா ஆஃப் தி இன்டஸ்டைன் என்கிற விசித்திர வியாதி. பணத்தைக் கண்ணில் காட்டினால்தான் ஆபரேஷன் தியேட்டர் கதவு திறக்கும் என்கிற டாக்டர்.
ஹீரோவிடம் கால் காசு இல்லை. கவலையோடு நடந்து வருகிறான். அவன் காலில் தட்டுப்படுகிறது ஒரு பை. திறந்தால், கரெக்டாக, டாக்டர் கேட்ட அதே அளவு பணம், கட்டுக் கட்டாக.
அவன் மனதுக்குள்ளே போராட் டம் - பாசமா, நேர்மையா? இதை எப்படி சினிமாவில் காட்டுவார்கள்? ஒரு டிரிக் ஷாட். ஹீரோ உடலுக்குள்ளிருந்து அவனுடைய மனசாட்சி எழுந்து வரும். அவனுடைய பாசமும் நேர்மையும் போராடும். வாக்குவாதம் முடிந்தவுடன் விட்டலாச்சார்யா படத்தில் கூடுவிட்டுக் கூடு பாய்தல்போல மனசாட்சி மறுபடியும் ஹீரோ உடலுக்குள்போய் மறையும். இந்த மனசாட்சிதான் உணர்வு மனம்.
உணர்வு மனத்தைவிட ஆயிரம் மடங்கு சக்திகொண்ட ஆழ்மனத்தில் நம் இலக்குகளைப் பதித்துவிட்டால், அவை சரியா தப்பா என்கிற கஷ்டமான கேள்விகளைக் கேட்காது. அத்தனை சக்தியையும் பயன்படுத்தி உங்கள் இலட்சியக்கனவை நனவாக்கிக்காட்டும். கனவுகள் இந்த ஆழ்மன ஆசைகளின் வெளிப்பாடுகள்.
இந்த அடிப்படையில், ஜாக் மாவின் கனவில் தோன்றிய சில காட்சிகளின் அர்த்தம். வைக்கோலைக் கூரிய ஆயுதமாக்குவது – முடியாது என்று பலரும் சொல்வதைச் செய்துகாட்டி சூப்பர்மேனாகும் விருப்பம்.
எல்லோரும் கோட், சூட் போட்டு வரும்போது ஜாக் மா அணிந்திருக்கும் பாரம்பரியப் பட்டு ஆடை – பிறரிடமிருந்து வித்தியாசம் காட்டும் விருப்பம், சீனப் பாரம்பரியம் வெளிநாட்டு நாகரிகத்தைவிடச் சிறந்தது என்னும் பெருமை.
கூலிங் கிளாஸ், ஸ்டைல் நடை – பழமையில் பெருமை காணும்போதே, இன்றைய வாழ்க்கை முறையிலும் இருக்கும் ஈடுபாடு.
Pancake, சுருட்டு, எள் என்கிற போதே எண்ணெயாக வந்து நிற்கும் கறுப்புப் பூனைப் பணிப்பெண்கள் – வசதியாக வாழவேண்டும் என்னும் வெறித்தனமான ஆசை. பிசினஸ் தொடங்கியபிறகும் ஜாக் மா தொடர் ந்து விசித்திரக் கனவுகள் கண்டார். தன் ஊழியர்களுக்கு எல்லா வசதிகளும் தர வேண்டும் என்னும் ஆசை இவற்றில் வெளிப்பட்டது.
கனவு1
ஜாக் மா அத்தனை ஊழியர்களையும், கம்பெனி செலவில் பிரான்சின் பாரீஸ் நகரத்தில் நடக்கும் பிரபல வசந்த திருவிழாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார். பரந்து விரிந்த மைதானம். அங்கே அலைகடலாய் மக்கள். பிரம்மாண்ட மேடை மின் விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் தகதகக்கிறது. மேடையில் இசைக்குழு. டிரம்ஸ், கிட்டார்கள், வயலின், டிரம்பெட் என வகை வகையான இசைக் கருவிகளின் ஆரவார சங்கமம். மைதானம் அதிர்கிறது. கோப்பை ஒரு கையில், கோலமயில் இன்னொரு கையில் என இருக்கும் பலரது நாடி நரம்புகளில் சூடு ஏறுகிறது. ஜாக் மாவும், அவர் ஊழியர்களும் ஆனந்தத்தின் உச்சியில். புது ரத்தம் பாய்ந்தவர்களாக வேலைக்குத் திரும்புகிறார்கள். இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் என்னும் மன நிறைவில் ஜாக் மா.
கனவு2
ஜாக் மா ஐரோப்பாவின் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காலெடுத்து வைக்கிறார். ``இவர் ஆசியாக்காரர். ஏழையாக இருப்பார். நம் ஹோட்டலில் தங்குவதற்கு இவரால் எப்படி முடியும்” என்று ஏளனமாகப் பார்க்கிறார்கள். அறை வேண்டும் என்று கேட்பவருக்கு யாருமே பதில் தரவில்லை. ஜாக் மா ஹோட்டல் முதலாளியிடம் போகிறார்.
“உங்கள் ஹோட்டலை நான் வாங்க வேண்டும். என்ன விலை?”
பஞ்சத்து ஆண்டியைப் பார்ப்பதுபோல் இளக்காரப் பார்வை. திமிரான பதில்.
“300 மில்லியன் டாலர்கள் தந்தால், ஹோட்டலை விற்பது பற்றி ஆலோசிக்கிறேன்.”
ஜாக் மா பாக்கெட்டில் கை விடுகிறார். வருகிறது செக் புக். ``சரக்.” கிழிக்கிறார். கையெழுத்து.
“ஹோட்டல் விலை 300 மில்லியன் தானா? 500 மில்லியன் டாலர்கள் கேட்பீர்கள் என்று நினைத்தேன்.”
செக்கை நீட்டுகிறார். முகத்தில் வெற்றிச் சிரிப்பு. முதலாளி ஹோட் டல் சாவியைத் தருகிறார். ஜாக் மா சிங்கநடை போடுகிறார். பின்னணி யில் ஆயிரம் கிட்டார்கள் முழக்கம், ஒலிக்கிறது பாட்டு – இன்று முதல் இந்த ஹோட்டல் உங்கள் ஹோட்டல்.
ஜாக் மா இத்தகைய கனவுகளை ஊழியர்களோடு பகிர்ந்துகொண்டது மட்டுமல்ல, பகல் கனவு காணும் பழக்கத்தையும் அவர்களிடம் உருவாக்கினார். முதல் வருடம் முடிந்தது. சாதாரணமாக போனஸ் கொடுக்கும் காலம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் அள்ள முடியும்? மாதச் சம்ப ளம் கொடுக்கவே திண்டாடும்போது போனஸுக்கு எங்கிருந்து பணம் வரும்? ஜாக் மா தீர்வு கண்டார் – ``கனவு காண்போம்,” ஜாக் மா அனைவரோடும் உட்கார்ந்தார்.
‘‘நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடலாமா?’’
“என்ன விளையாட்டு?”
“இதற்குப் பெயர் கனவு காணும் ஆட்டம்’’
``என்ன செய்யப்போகிறோம்?”
“நம் எல்லோருக்கும் 50 லட்சம் யான்கள் போனஸ் கிடைத்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.“
”ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் யான்களா?”
“ஆமாம். அத்தனை பணம் கையில் கிடைத்தால் எப்படிச் செலவு செய்வோம் என்று கற்பனை செய்வோம்.”
மந்திரித்த ஆடுகளாய் அத்தனை பேரும் கற்பனைக் குதிரைகளைத் தட்டிவிட்டார்கள்.
ஒரு மணி நேரம் ஓடியது. ஜாக் மா சொன்னார், “விளையாட்டை முடித்து கொள்வோம். வேலைக்குத் திரும் புவோம். ஆட்டத்தை ரசித்தீர்களா?’
வெறும் ரசனையா? மூழ்கியே போயிருந்தார்கள். ஏனென்றால், ஒரு வர் சொன்னார், ``நான் 30 லட்சம்தான் செலவழித்திருக்கிறேன். இன்னும் அரை மணி நேரம் தாருங்கள். மீதி 20 லட்சத்தையும் செலவழித்துவிட்டு வருகிறேன்.”
அறை முழுக்க இடிச் சிரிப்பு. இந்த உற்சாக டானிக்கில் ஒவ்வொருவர் வேலையும் படு மும்முரமாக நடந்தது. ஊழியர் உற்சாகம் சரி. ஆர்டர்கள் வரவில்லையே? என்ன செய்யலாம்? ஜாக் மாவுக்கு ஒரே ஒரு வழிதான் தெரிந்தது.
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT