Published : 23 Mar 2024 06:15 AM
Last Updated : 23 Mar 2024 06:15 AM
கோவை: உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காகவும், பருத்தி கொள்முதல் செய்யும்போது நூற்பாலைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருத்தியின் உண்மையான பயனர்கள், குறிப்பாக பருத்தி ஜவுளி ஆலைகள் மேற்படி குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ஜவுளி ஆணையர் அலுவலகம் வெளியிடும் மதிப்பீடுகளை மட்டும் நம்பியிருக்க வேண்டும். வேறு எந்த அமைப்பும் அளிக்கும் செய்தி அறிக்கைகள் அல்லது தகவல்களை புறக்கணிக்க வேண்டும்.
பருத்தி சப்ளை நிலை மிகவும் வசதியாக இருப்பதால், பருத்தி விலை திடீரென 355 கிலோ எடை கொண்ட கண்டி ஒன்றுக்கு ரூ.55,300-ல் இருந்து ரூ.61,500 ஆக உயர்ந்தபோது, பருத்தி வாங்குவதில் பீதியை தவிர்க்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டது. சர்வதேச பருத்தி ஆலோசனைக் குழுவும், உயர் பருத்தி விலை எவ்வித முகாந்திரமுமின்றி, அடிப்படையில்லாமல் ஊகங்களால் இயக்கப்படுகின்றன. எனவே ஏற்கெனவே குறிப்பிட்டபடி பருத்தி வாங்குவதில் பீதிக்கு இடம்கொடுக்க வேண்டாம்.
2024 மார்ச் 14-ல் நடைபெற்ற பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான குழு பருத்தி சீசன் 2023-24-ம் ஆண்டுக்கான இரண்டாவது கூட்டத்தில், தொடக்க இருப்பு 61 லட்சம் பேல்கள், பயிர் உற்பத்தி 323 லட்சம் பேல்கள், இறக்குமதி 12 லட்சம் பேல்கள், மில் நுகர்வு 301 லட்சம் பேல்கள், மில்கள் அல்லாத நுகர்வு 16 லட்சம் பேல்கள், ஏற்றுமதி 27 லட்சம் பேல்கள் எனவும், இறுதி இருப்பு 52 லட்சம் பேல்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடுகள் மிகவும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளதால், பருத்தி தொடர்பான விஷயங்களில் பருத்தி உற்பத்தி மற்றும் நுகர்வுக்கான குழுவின் தரவை நம்பியிருக்க வேண்டும். உற்பத்திக்காகவும், இருப்பு வைத்துக் கொள்வதற்காக வும், பருத்தி கொள்முதல் செய்யும்போது நூற்பாலைகள் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்.
இந்திய உள்நாட்டு பருத்தி விலைகள் சந்தையில் எம்சிஎக்ஸ், ஐசிஇ ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாக இருந்தாலும், ஊக வணிகர்கள் விலைகளை இடைவிடாமல் உயர்த்தி, செயற்கையாக அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கி, ஜவுளித் தொழிலின் செயல்திறனைக் கடுமையாக பாதித்து வருகின்றனர். கஸ்தூரி என்ற பிராண்ட் பருத்தி அதிக பிரீமியம் வசூலிக்கும். இந்த பிராண்டை ஊக்குவிப்பதில் கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT