Published : 20 Mar 2024 05:17 AM
Last Updated : 20 Mar 2024 05:17 AM
சென்னை: கோடை வெயில் பொதுமக்களை வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் மோர், ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும்பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினசரி 28 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர் உட்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் பால் பொருட்கள் விற்பனை மூலம் மாதம் ரூ.45 கோடி வரை ஆவினுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், மோர், குல்பி உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆவின் மோர், ஐஸ் கிரீம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்துஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் வினீத் கூறியதாவது: இந்த ஆண்டு கோடைகாலத்தில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆவின் ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவற்றின் விற்பனையை அதிகரிக்க உள்ளோம்.
தற்போது கோடைவெயில் மக்களை வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், ஆவின் மோர், ஐஸ் கிரீம் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் 20,000 மோர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. எனவே தினமும் 60,000 மோர் பாட்டில்கள் வரை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, ஐஸ்கிரீம் உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை அம்பத்தூர், சேலம், மதுரையில் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு ஐஸ்கிரீம், குல்பி ஐஸ், மோர் உள்ளிட்டவற்றை அதிக அளவு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் ஆவின் மோர் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT