Published : 20 Mar 2024 04:08 AM
Last Updated : 20 Mar 2024 04:08 AM

தென்னை மகத்துவ மையத்தில் நவீன தொழில்நுட்பங்கள்: உடுமலையில் கண்டு வியந்த குஜராத் விவசாயிகள்

உடுமலை: குஜராத் மாநிலத்தில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதி உதவியுடன் குஜராத்தை சேர்ந்த 20 பேர் கொண்ட விவசாயிகள் குழுவினர் உடுமலை திரு மூர்த்தி நகரில் உள்ள தென்னை மகத்துவ மையத்துக்கு வந்தனர். அங்கு, தென்னையில் பின்பற்றப்படும் உயர் தொழில் நுட்பங்களை கண்டு, அவர்கள் வியந்தனர்.

இது குறித்து தென்னை மகத்துவ மையத்தின் உதவி இயக்குநர் ரகோத்தமன் கூறியதாவது: தென்னை மகத்துவ மையத்தில் கடைபிடிக்கப்படும் உயர் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் விவசாயிகள் வருவது வழக்கம். தற்போது, குஜராத் மாநில விவசாயிகள் வந்தனர்.

அவர்களுக்கு தென்னை மகத்துவ மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், சாதனைகள், தென்னை வளர்ச்சி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள், பரப்பு விரிவாக்கத் திட்டம், தாய்நெற்று விதை தோட்டம், தென்னை நாற்றங்கால் அமைத்தல், மாதிரி செயல்விளக்கப் பண்ணை, அங்கக உரக்கூடம் அமைத்தல், மறு நடவு, புத்துயிர் ஊட்டல், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டங்கள், தென்னை தொழில் நுட்ப இயக்கத்தின் மூலமாக அதுசார்ந்த தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

சர்வதேச, இந்திய மற்றும் தமிழக அளவில் தென்னை பயிரின் இன்றைய நிலை, தென்னையில் ரகங்கள் மற்றும் தேர்வு, தென்னை பயிருக்கேற்ற மண் , தட்ப வெப்ப சூழ்நிலைகள், உயர் விளைச்சல் தென்னை ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு, தென்னை சாகுபடியில் உழவியல் தொழில் நுட்பங்கள், தாய் மர தேர்வு, விதைக் காய்கள் தேர்வு, நாற்றங்கால் மேலாண்மை, இளந்தென்னங்கன்றுகள் பராமரித்தல், தென்னையில் ஊடு பயிர்கள், பல அடுக்கு பயிர்கள்,கலப்பு பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் துல்லிய பண்ணையம் அமைத்தல், தென்னந்தோப்பில் பசுந்தாள் உரப் பயிர் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி, ஒருங்கிணைந்த பூச்சி, நோய், உரம், நீர் மற்றும் சத்து குறைபாடு மேலாண்மை, கலப்பின ரகம் தயாரித்தல், அறுவடை பின்செய் நேர்த்தி, மதிப்புக் கூட்டல், சந்தைப் படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கண்காட்சியில் தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், தென்னை உயிர் உரங்கள், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள், விளக்குப் பொறி, இனக் கவர்ச்சிப் பொறி ஆகியவை வைக்கப்பட்டு, விளக்கமளிக்கப்பட்டது. உடன் குஜராத் மாநில வேளாண் அதிகாரிகள் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x