Published : 14 Mar 2024 04:50 AM
Last Updated : 14 Mar 2024 04:50 AM
சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒருட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில் துறைபல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில்களையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இதுவரை இல்லாத அளவாக, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு மற்றும் 26.90 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சூழலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தத்தை தமிழக வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழும தலைமை நிதி அலுவலர் பி.பி.பாலாஜி ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை செயலர் அருண் ராய், சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் டாடா குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது: தமிழக வரலாற்றில் முதல்முறையாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் 2 மாத இடைவெளியில் தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன. முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் தொழிற்சாலை நிறுவ வின்பாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. பிப்ரவரியில் அந்த தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக டாடா நிறுவனத்தின் பசுமை வாகன உற்பத்தி ஆலையைரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில்அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அடு்த்த சில மாதங்களில் டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கும். இந்த நிறுவனத்துக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடக்கம்தான். விரைவில் இன்னும் பல பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர உள்ளன.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் அரசின் சலுகைகளை எதிர்பார்த்து வருவது இல்லை. மாறாக, இங்குள்ள திறன்வாய்ந்த மனிதவளம், உகந்த சூழல் ஆகியவற்றுக்காகவே வருகின்றன. தமிழகத்தில் மட்டும்தான் திறன் பெற்ற மனித வளம் கிடைக்கிறது.
முதலீடுகளைவிட, பெரிய அளவிலானவேலைவாய்ப்பை நோக்கித்தான் அரசுசெயல்படுகிறது. கடந்த 2021 முதல் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நிறுவனங்கள் பணியைதொடங்கிவிட்டன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT