Published : 13 Feb 2018 10:06 AM
Last Updated : 13 Feb 2018 10:06 AM
ஜா
க் மா திரும்பத் திரும்பக் கணக் குப் போட்டார். எத்தனைதான் செலவுகளைச் சுருக்கினாலும், ஒருலட்சம் யுவான் (Yuan)* முதலீடு தேவை. தன் சேமிப்பையும், மனைவியிடம் இருந்த பணத்தையும் முதலில் திரட்டினார். 6,000 யுவான்கள் மட்டுமே தேறியது. நண்பர்கள் கூட்டத்தில் ஆதரவாகக் கை தூக்கிய ஹே யிபிங் 10,000 யுவான்கள் முதலீடு செய்து பிசினஸில் பங்காளியாகச் சேர்ந்தார். இன்னொரு நண்பர், ஸாங் வைங் (Song Weing) தன் பங்குக்கு 10,000 யுவான் கள் தந்தார்.
ஜாக் மா கொள்கை, "நண்பர்களிடம் கையேந்துங்கள். அவர்கள் இல்லையென்று சொல்லுவதில்லை." தன் அப்பா, அம்மா, தங்கை, மச்சான், மாமியார், நண்பர்கள் ஆகிய எல்லோரிடமும் பண உதவி கேட்டார். இவர்கள் யாருமே பணக்காரர்களல்ல, அன்றாடங்காய்ச்சிகள்.
இன்டர்நெட் பற்றியோ, ஜாக் மாவின் பிசினஸ் லாபம் பார்க்குமா, நஷ்டத்தில் ஓடுமா என்றெல்லாம் எதுவுமே தெரியாது. தங்களால் இயன்ற தொகை தந்தார்கள் - 13,000 யுவான்கள். ஒரே காரணம், ஜாக் மாவிடம் இருந்த நட்பு, பாசம், அவர் முன்னேற்றத்தில் இருந்த நல்லெண்ணம்.
கையில் மொத்தம் 39,000 யுவான்கள். இன்னும் வேண்டும் 61,000 யுவான்கள். வீட்டுச் சாமான்கள், மொழிபெயர்ப்புக் கம்பெனி சாமான்களை விற்றார். அப்பாடா, எப்படியோ ஒரு லட்சம் யுவான்கள் கைவசம். பணம் போட்ட ஹே யிபிங் முழுநேர ஊழியராக ஜாக் மாவுடன் தோளோடு தோள் கொடுத்து உழைக்க முன்வந்தார். ஆங்கில பலத்துக்கு ஜாக் மா, கம்ப்யூட்டர் அறிவுக்கு ஹே யிபிங். பணபலமும், ஆள்பலமும் ரெடி.
ஸிஜியாங் ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி (Zhejiang Haibo Internet Technology Company. சுருக்கமாக ZHITC) என்று பெயர் சூட்டினார்கள். இந்தப் பெயரையும், இணையப் பக்கங்களுக்கான சீனப் பக்கங்கள் (China Pages) என்னும் பெயரையும் பதிவு செய்தார்கள்.
ஜாக் மாவின் முதல் கம்பெனி, மொழிபெயர்ப்புக் கம்பெனி பெயர் ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி (Hanghou Haibo Translation Agency). இரண்டிலும் "ஹைபோ’ என்னும் வார்த்தை, சீன மொழியில், "நம்பிக்கை" என்று அர்த்தம். வாழ்க்கையே நம்பிக்கைதான் என்னும் ஜாக் மா சித்தாந்தத்தின் பிரதிபலிப்பு!
ஏப்ரல் 1995. சீன சம்பிரதாயப்படி, புது முயற்சிகள் தொடங்கும்போது பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். சினிமாவில் மேக மண்டலத்திலிருந்து தேவதைகள் இறங்குவதுபோல், பட்டாசுப் புகை மண்டலத்தின் நடுவே ZHITC அலுவலகம் ஆரம்பம். 130 சதுர அடி பரப்பு. ஜாக் மா அமெரிக்காவில் வாங்கிவந்த ஒற்றைக் கம்ப்யூட்டர். ஜாக் மா, காத்தி, ஹே யிபிங், அவர் காதலி. யாருக்கும் சம்பளம் கிடையாது. இரு பெண்களுக்கும் அலுவலகப் பொறுப்பு. ஜாக் மா, ஹே யிபிங் இருவருக்கும் சேல்ஸ் வேலை.
இன்டர்நெட் என்றால் என்னவென்றே தெரியாத சீனாவில் தான் போடுவது புதிய பாதை என்று ஜாக் மாவுக்குத் தெரியும். பிசினஸ் ஜெயிக்கவேண்டுமானால், முதலில் பிசினஸ்மேன்கள் மனங்களில் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். தன் திறமையையும், இன்டர்நெட்டின் வலிமையையும் நிரூபிக்கவேண்டும். எங்கே தொடங்கலாம்? முதலில் மொழிபெயர்ப்புக் கம்பெனியின் வாடிக்கையாளர்கள், அடுத்து நண்பர்கள், பழைய மாணவர்கள் என்று கச்சிதமாகத் திட்டம் போட்டார்.
மொழிபெயர்ப்புக் கம்பெனியின் கஸ்டமர்களைச் சந்தித்தார். இலவசமாக இணையப் பக்கங்கள் வடிவமைத்துக் கொடுத்தார். "இவர் புதிதாக ஏதோ செய்கிறார்" என்னும் பேச்சு பிசினஸ் வட்டாரங்களில் தொடங்கியது. இந்தப் பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்க வேண்டும். ஜாக் மாவும், ஹே யியிபிங்கும் தெருத் தெருவாகப் போவார்கள். ஒவ்வொரு கம்பெனிக்குள்ளும் அழையாத விருந்தாளிகளாக நுழைவார்கள்.
தங்கள் சேவை பற்றி விளக்குவார்கள். ஜாக் மா அந்த அனுபவத்தை விவரிக்கிறார்,"4000 யுவான் மட்டுமே தாருங்கள். உங்கள் கம்பெனியை உலகத்துக்கு அறிமுகம் செய்கிறேன் என்று கம்பெனிகளிடம் சொன்னேன். என்னை யாருமே நம்பவில்லை. டுபாக்கூர் ஆசாமியாகப் பார்த்தார்கள்."
நம் தலைவரிடம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பதில் உண்டு. வழி கண்டார். புதிதாகத் தொடங்கும் பிசினஸ் ஜெயிக்க வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் மனங்களில் கம்பெனியைப் பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்கவேண்டும் என்பது மேனேஜ்மென்ட் மேதைகள் அடிக்கடி சொல்லும் அடிப்படைச் சித்தாந்தம். இதை எப்படிச் செய்யலாம்? ஜாக் மா கேரெக்டரே தனி. சீரியஸ் சமாச்சாரங்களையும் ஜாலியாக எடுத்துக்கொள்வார். ஆகவே, அவர் யுக்திகளிலும் விளையாட்டுத்தனம், குறும்புகள்.
ஸிடிசி ஹைபோ இன்டர்நெட் டெக்னாலஜி கம்பெனி (ZHITC) 130 சதுர அடியில் இருக்கும் ஒரே ஒரு அறை, சொத்து ஒரே ஒரு கம்ப்யூட்டர், "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன். ரெண்டு குளம் பாழு. ஒண்ணிலே தண்ணியே இல்லே" என்கிறமாதிரி நான்கு பணியாளர்கள். அவர்களில் இரண்டு பேர் முதலாளிகள். சம்பளமில்லாத மற்ற இரண்டு பேரில் ஒருவர், முதல் முதலாளி மனைவி. அடுத்தவர் இரண்டாம் முதலாளியின் காதலி – இத்தனை உண்மைகளையும் வெளியே சொன்னால், வாடிக்கையாளர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விடுவார்கள்.
பிரம்மாண்டக் கம்பெனி என்னும் பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஜாக் மா பொய் சொல்லவில்லை, ஏமாற்றுத்தனம் செய்யவில்லை. சின்னத் தந்திரம். "வாய்மை எனப்படுவது யாதெனின், யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" என்னும் திருக்குறள் பாணி உண்மை.
வகை வகையான விசிட்டிங் கார்ட்கள் தயார் செய்தார். காசா, பணமா செலவு? பதவிப் பட்டங்களை வள்ளல்களாகத் தமக்குள் வாரி வழங்கிக்கொண்டார்கள். தனக்கு சி.இ.ஓ. என்று பதவி போட்ட ஒரு கார்ட்; மார்க்கெட்டிங் டைரக்டர் என்று இன்னொரு கார்ட்; மனைவி காத்தி ஜெனரல் மானேஜர்: ஹே யிபிங் சீஃப் ஆப்பரேட்டிங் ஆபீசர்; அவர் காதலி டெக்னிக்கல் மேனேஜர்.
இப்படி பந்தாப் பதவி போட்ட விசிட்டிங் கார்டைச் சிறிய, நடுத்தரக் கம்பெனிகளிடம் நீட்டினால் உடனேயே சந்திப்பார்கள், ஆர்டர்கள் தருவார்கள் என்று ஜாக் மா திட்டம் போட்டார். இந்தத் தந்திரம் ஒர்க் அவுட் ஆனது. ஒரு கம்பெனியின் சி.இ.ஓ – வே வரும்போது அவரைச் சந்திக்காமல் இருக்கலாமா, காத்திருக்க வைக்கலாமா? சந்தித்தார்கள். ஜாக் மாவின் உரையாடல் திறமை ZHITC பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்கியது. நன்மதிப்பு என்னும் இன்றைய வித்து, நாளைய ஆர்டர் விருட்சம்.
ஆர்டர் வாங்கவேண்டுமா? நம் தீராத விளையாட்டுப் பிள்ளை பில் கேட்ஸையே ஆயுதமாக்கத் தயங்கமாட்டார். அப்படி அவர் செய்தது ஒரு தில்லாலங்கடி வேலை.
1995 – இல் பில் கேட்ஸ் எழுதிய The Road Ahead என்னும் புத்தகம் வெளியானது. சீனர்கள் நம்மைப்போலவே, சுய முன்னேற்ற நூல்கள் படிப்பதில் பேரார்வம் கொண்டவர்கள். சீன மொழிபெயர்ப்பு, விற்பனையில் பட்டையைக் கிளப்பியது. ஜாக் மா இதைப் பயன்படுத்திக்கொண்டார்.
ஆர்டர் வாங்குவதற்காகத் தொழில் அதிபர்களைச் சந்திக்கும்போது, "இன்டர்நெட் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றப்போகிறது என்று பில் கேட்ஸ் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே…." என்று தொடங்குவார். நிஜம் என்ன தெரியுமா? The Road Ahead புத்தகத்தில் இப்படி ஒரு வாக்கியமே கிடையாது. ஜாக் மாவின் ரீல். இதற்கு அவர் சொன்ன காரணம்,"ஜாக் மா சொன்னால் நம்பமாட்டார்கள். அதையே, பில் கேட்ஸ் வாய்மொழி என்றால், நம்புவார்கள்.
ஜாக் மா இப்படிக் குட்டிக்கரணம் அடித்தாலும், ஆர்டர்கள் கொட்டவில்லை, சொட்டின. அவரோடு முதலீடு செய்திருந்த ஹே யிபிங், ஸாங் வைங் இருவருக்கும் சந்தேகம், பயம் - இந்தக் கப்பல் ஊர் போய்ச் சேருமா அல்லது மூழ்குமா?
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT