Published : 04 Mar 2024 04:04 AM
Last Updated : 04 Mar 2024 04:04 AM
ஒட்டன்சத்திரம்: கேரளாவைப் போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்து எண்ணெய் தயாரித்து ரேஷனில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இது மட்டுமின்றி தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்பு கின்றனர்.
தற்போது தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை தினமும் சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கிறது. கேரள மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல் செய்து, அரசுக்கு சொந்தமான ஆலைகளிலும், தனியார் ஆலைகளிலும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அதேபோல், கொப்பரை தேங்காய்க்கு நிரந்தரமான விலை கிடைக்க, தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சத்திரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வமணி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் தேங்காய்க்கு அடுத்தப் படியாக கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிக அளவில் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கொப்பரை தேங்காய் விலை சரிவடைந்து வருகிறது. 2017-ல் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் ரூ.145-க்கு விற்றது. அதன் பிறகு, தற்போது வரை அதிகபட்சமாக ரூ.100 முதல் ரூ.120-க்கு மேல் சென்றதில்லை. தற்போது ரூ.100-க்கும் குறைவாக விற்பனையாகிறது.
இந்த விலை சரிவு விவசாயிகளை கவலைஅடையச் செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து தரமான தேங்காய், கொப்பரை விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. இருந்தும் நிரந்தரமான விலை கிடைப்ப தில்லை. எனவே, கேரள அரசை போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதல் செய்து, அதில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT