Published : 03 Mar 2024 12:37 PM
Last Updated : 03 Mar 2024 12:37 PM
கோவை: தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு தினசரி மின் நுகர்வு 19 ஆயிரம் மெகா வாட்டுக்கும் மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின் தட்டுப்பாட்டை சமாளிக்கவும் சீரான மின் விநியோகத்துக்கும் தயார் நிலையில் உள்ளதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தினசரி மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் மத்திய கிரிட் ( மின் கட்டமைப்பு ) மூலம் 209.52 மில்லியன் யூனிட், அனல் மின் நிலையத்தால் 94.75, ஹைட்ரோ திட்டத்தில் 7.11, காஸ் 5.55, காற்றாலை 22.26, சூரிய ஒளி 32.2, பையோ திட்டத்தில் 12.14 மில்லியன் யூனிட் வீதம் மின் உற்பத்தி கிடைத்துள்ளது.
இதனால் மின்தேவை 383.52 மில்லியன் யூனிட் என்ற நிலையில் அன்றைய தினம் 385.61 மில்லியன் யூனிட் தமிழகத்தில் இருந்தது. எதிர்வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், மின் விநியோகம் சீராக இருப்பதை தமிழ்நாடு மின் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள், தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்க ( டீகா ) தலைவர் பிரதீப், தமிழ்நாடு சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்க ( டான்ஸ்பா ) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா ஆகியோர் கூறியதாவது: இந்தாண்டு தினசரி மின்நுகர்வு 19 ஆயிரம் மெகாவாட் முதல் 20 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிரிட், சூரியஒளி, காற்றாலை ஆகியவை மின் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
தமிழ்நாடு மின் வாரியம் கோடை கால மின் தேவையை கணக்கில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் என நம்புகிறோம். தமிழக அரசு சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட திட்டங்களின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
தமிழ்நாடு மின் வாரிய கோவை மண்டல தலைமைப் பொறியாளர் குப்பு ராணி கூறும்போது, ‘‘சீரான மின் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக மின் தடை செய்ய வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின் வாரியம் திட்டமிட்டு தயார் நிலையில் உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT