Published : 29 Feb 2024 03:12 PM
Last Updated : 29 Feb 2024 03:12 PM

ஜவுளித் துறையை பாதுகாக்க புதிய விதியை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு யுவராஜா வலியுறுத்தல்

சென்னை: சிறு, குறு தொழில்கள் மற்றும் ஜவுளித் துறையை பாதுகாக்க மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட புதிய விதியை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சிறு, குறு தொழில்கள் தங்களது வணிக கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வந்துள்ளது செக்‌ஷன் 43பி(எச்) மாற்றமானது வருகிற மார்ச் மாதம் 31-ந் தேதி அமலாகிறது. இதன்படி தங்கள் இருப்பு நிலை குறிப்பு (பேலன்ஸ் ஷீட்) கணக்கில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாக கருதப்படும். அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜவுளி சார்ந்த தொழிலில் துணிகளை கொள்முதல் செய்து பல நிலைகளை கடந்து விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அதற்கு ஏற்ப 45 நாட்களுக்குள் அல்லது அதற்கு மேலான நாட்களில் கடன் தொகையை நேர்செய்வார்கள். தற்போதைய புதிய சட்ட திருத்தத்தால் அந்த தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும். அதனால்தான், சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அல்லது ஒரு வருடத்துக்காவது இந்த புதிய விதிகளை அமல்படுத்தாமல் ஒத்திவைக்க வேண்டும்.

மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் புதிதாக கொண்டு வந்துள்ள MSME IT விதி 43B (h) ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு துணி வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் ஒரு நாள் முழு வேலை நிறுத்தத்தை நடத்தியது.

புதிய விதியின் படி ஒரு வணிகர் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களிடம் கடன் அடிப்படையில் பொருட்களைப் பெற்றால், அந்தத் தொகையை 45 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இல்லையெனில், அவர் வருமான வரி கட்ட வேண்டும் பொதுவாக இந்த விதி நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், பல வியாபாரிகளால் 45 நாட்களுக்குள் கடனை செலுத்த முடியவில்லை. 50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட MSME-கள் மற்றும் பதிவு செய்யப்படாத MSME-கள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் திருத்தப்பட்ட விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

எனவே, பல வர்த்தகர்கள் MSME அல்லாத மற்றும் 50 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்ட பெரிய நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கத் தேர்வு செய்கிறார்கள். எனவே, 43B (h) என்ற புதிய விதியின் கீழ் வரும் MSMEகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால், புதிய விதி திரும்பப் பெறப்பட வேண்டும் அல்லது திருப்பிச் செலுத்துவதற்கான நேரத்தை 90 நாட்களாக உயர்த்த வேண்டும்.

ஈரோட்டில் நடந்த போராட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஈரோட்டில் 5000-க்கும் மேற்பட்ட வணிகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் ஒருநாளில் பாதிக்கப்பட்டது.

ஏற்கெனவே உலகம் முழுவதும் ஜவுளி தொழில் நலிவடைந்துள்ளது. 2020ம் ஆண்டுக்குப் பிறகு கரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இயங்கி வந்த ஜவுளி தொழில் முற்றிலும் நலிவடைந்து போனது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்பட்டு வந்த ஜவுளி தொழில் இந்த புதிய சட்ட திருத்தத்தால் முற்றிலுமாக அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வேளாண்மைக்கு அடுத்தபடியாக கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளிக்கும் சிறு குறு தொழில்கள் மற்றும் ஜவுளி துறையை பாதுகாக்கவும் இந்த புதிய விதியை மத்திய நிதி அமைச்சர் வாபஸ் பெற வேண்டும்" இவ்வாறு யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x