Published : 28 Feb 2024 06:05 AM
Last Updated : 28 Feb 2024 06:05 AM
சென்னை: பற்றாக்குறை காரணமாக, மின்மீட்டர்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்து நுகர்வோர் வாங்கிக் கொள்ள மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் மின்இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது. இதில் பதிவாகும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. மீட்டர் கோரி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் நுகர்வோருக்கு மீட்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால், சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. மின்வாரியப் பிரிவு அலுவலகங்களில் மீட்டருக்கு பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மீட்டர்களை நுகர்வோர் வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் 8.50 லட்சம்,ஒருமுனை மீட்டர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 20 லட்சம் மீட்டர்களைவாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆனால், இவை கிடைக்ககாலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்டருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மின்இணைப்புக் கோரி விண்ணப்பிப்போர் தாங்களே தனியாரிடம் மீட்டர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒருமுனை மீட்டர் ரூ.970, மும்முனை மீட்டர் ரூ.2,610 என விலைநிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் இந்த மீட்டரை வாங்கியதும் மின்வாரியப் பிரிவு அலுவலகத்தில் வழங்க வேண்டும். அங்கு அதை ஊழியர்கள் சோதனை செய்து பின்னர் அதை பொருத்துவார்கள். சொந்தமாக மீட்டர் வாங்கும் நுகர்வோரிடம் மீட்டருக்கான வைப்புத் தொகை வசூலிக்கப்பட மாட்டாது.
இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தொடர்பான விவரங்களை மின்வாரிய அலுவலகத்தில் விளம்பரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT