Published : 24 Feb 2024 05:14 PM
Last Updated : 24 Feb 2024 05:14 PM

மாநில நெடுஞ்சாலைகளிலும் இனி சுங்கச்சாவடி? - வாகன உரிமையாளர்கள் கலக்கம்

மாநில நெடுஞ்சாலையான மதுரை சுற்றுச் சாலையில் செயல்படும் வண்டியூர் சுங்கச்சாவடி.

மதுரை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைபோல், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதால், மதுரையைப் போல் இனி தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளிலும் எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் அமைய வாய்ப்புள்ளதால் வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும், நிர்வகிக்கவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் செயல்படுகிறது. அதுபோல், தமிழகத்தில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த மசோதா விவாதத்தின்போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, ‘‘சுங்கச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது. ஆணைய பரிந்துரை, பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பிறகே முடிவு எடுக்கப்படும். பாலம், சாலைகள் அமைப்பதற்கு நிதி இல்லாததால் ஆணையம் அமைத்து திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்’’ என்றார்.

ஆனால், மதுரையில் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுற்றுச் சாலை (ரிங் ரோடு)யில், ஏற்கெனவே வண்டியூர், சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய இடங்களில் சுற்றுச் சாலைகள் அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

அமைச்சர் ‘‘சுங்கச் சாவடிகள் அமைப்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது’’ என்று பொடி வைத்து பேசியுள்ளார். அதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல், மாநில நெடுஞ்சாலை ஆணையமும் அமைக்கப்பட்டால், இனி மதுரையைப் போல் மாநிலத்திலுள்ள மற்ற மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘சுங்கச் சாவடிகள்’ அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச் சாவடிகள் அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கிறது. மத்திய அரசு வாகன விற்பனை மற்றும் பதிவின் போது சாலை வரி வாங்காததாலேயே, சுங்கக் கட்டணம் வசூல் செய்கிறது.

ஆனால் மாநில அரசு புதிய வாகனங்கள் பதிவு செய்யும்போதே சாலை வரியையும் உரிமையாளர்களிடமிருந்து வசூ லிக்கிறது. அதனால் மீண்டும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க தனியாக சுங்கக் கட்டணம் வசூ லிப்பது எப்படி சரியாகும்? என வாகன உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து கூறியதாவது: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதால் எதிர்காலத்தில் சுங்கச்சாவடிகள் வரும். மேலும், இந்த ஆணையம் அமைப்பதால் நிரந்தர வேலைவாய்ப்பும் பறிபோக வாய்ப்புள்ளது. தமிழக அரசின் கீழ் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய நெடுஞ்சாலை, மாவட்ட இதர நெடுஞ்சாலை என 3 வகையான சாலைகள் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை மத்திய மாநில அரசின் பங்களிப்போடும் இருந்து வருகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிர்வாகத்துக்கு கொண்டு சென்று சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடர்ந்து வருகிறது.

தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கக் கூடிய தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையமும் இதனைப்பின்பற்றி சுங்கக் கட்டணங்கள்வசூல் செய்யும். தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை ஆணையத்தில் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் சுங்கச்சாவடியும், கட்டணமும் தேவை என்றே பரிந்துரைப்பார்கள். அதனால், தேசிய நெடுஞ்சாலைகளை போல் இனி மாநில நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய சாலைகளும் தனியாரிடம் செல்ல வாய்ப்புள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x