Published : 06 Feb 2018 08:13 AM
Last Updated : 06 Feb 2018 08:13 AM

ஆன்லைன் ராஜா 13: தலைவர் ரிஸ்க் எடுக்கிறார்!

ஜா

க் மா வீட்டில் தினமும் அவருடைய மாணவர்களும் நண்பர்களும் கூடுவார்கள். டீ குடிப்பார்கள், அரட்டை அடிப்பார்கள், சீட்டு விளையாடுவார்கள். இந்தச் சந்திப்புகளில், ஜாக் மா வாயைத் திறந்தாலே இன்டர்நெட்தான். கை, கால்களை ஆட்டி உணர்ச்சி பொங்க, இன்டர்நெட் எப்படியெல்லாம் உலகத்தை மாற்றப்போகிறது, அந்த மாபெரும் சக்தியைச் சீனா எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விவரித்தார். தன் இன்டர்நெட் பிசினஸ் திட்டங்களை விளக்கினார். இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்ட சென் வே சொல்கிறார், ``அவர் சொன்னது எதுவுமே எங்களுக்குப் புரியவில்லை.”

ஜாக் மா தீவிரமாக ஆலோசித்தார். இன்டர்நெட் கம்பெனி தொடங்குவது மொழிபெயர்ப்பு ஏஜென்சி போல் அல்ல. நிறைய மூலதனம் வேண்டும். அது மட்டுமல்ல, முழு நேரமும் செலவிடவேண்டும். இதுவரை செய்ததுபோல், கல்லூரி வேலை, பிசினஸ் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்யமுடியாது. கல்லூரி வேலையை ராஜிநாமா செய்யவேண்டும். மாதா மாதம் வரும் சம்பளம் நின்றுவிடும். குடும்பச் செலவை எப்படிச் சமாளிப்பது? இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க அலைகிறோமோ என்று பயம். தயக்கம், குழப்பம்.

ஜாக் மா முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்பார். நெருக்கமான 23 நண்பர்களை வீட்டுக்கு வரச் சொன்னார். அவர்களோடு மனைவி காத்தி. தன் திட்டத்தை விளக்கினார்.

“இன்டர்நெட்டுக்கு எத்தனை சக்தி தெரியுமா? ஒரு சோதனை ஓட்டமாக, பேராசிரியர் ஆஹோவின் மருமகன் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி, நம் ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி பற்றி ஒரு இணையப் பக்கம் திறந்தார். மூன்றே மணி நேரங்கள். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளிலிருந்து நம் சேவையைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி ஐந்து வினவல்கள். சீனாவில் ஏராளமான நிறுவனங்கள் உலகத்தின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய விரும்புகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இணையத்தில் போட்டால், அவர்களுக்கு ஆர்டர்கள் வந்து குவியுமே?”

“அதனால் நமக்கு என்ன லாபம்?”

“நாம் ஒரு கம்பெனி தொடங்குவோம். சீனக் கம்பெனி பற்றிய விவரங்களை ஆங்கிலத்தில் எழுதி இணையத்தில் ஏற்றுவோம். இது நாம் அவர்களுக்குச் செய்யும் சேவை. இதற்கு அந்த கம்பெனிகளிடம் கட்டணம் வசூலிப்போம்.”

“சீனக் கம்பெனிகள் ஏன் நம்மிடம் வரவேண்டும்? நேரடியாகவே தங்கள் விவரங்களை இணையத்தில் ஏற்றலாமே?”

“முடியாது. ஏனென்றால், அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இன்டர்நெட் பற்றியும் தெரியாது. நம் ஆங்கில அறிவு ஹாங்ஸெள நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் பிரபலம். நமக்கு ஒத்துழைப்புத் தரும் ஸ்டூவர்ட் டிரஸ்ட்டி இணையப் பக்கங்களை வடிவமைப்பதில் மேதை. சீனாவில் வேறு யாருக்குமில் லாத தனித்துவ பலங்கள் இவை. ஆகவே, இந்த பிசினஸ் நிச்சயம் ஜெயிக்கும்.”

ஜாக் மா நண்பர்கள், மனைவி முகங்களைப் பார்த்தார். அவர் எதிர்பார்த்த உற்சாகம் இல்லை.

``நான் இந்த பிசினஸ் தொடங்க யார் யாருக்கு சம்மதம்? கை தூக்குங்கள்.”

ஒரே ஒரு கை மட்டும்தான் உயர்ந்தது. ஜாக் மாவோடு கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக இருந்த ஹே யிபிங் (He Yibing). மனைவி காத்தி உட்பட 23 பேர் இன்டர்நெட் பிசினஸுக்கு எதிராய்!

எதிர்ப்பு அதிகமாகும்போது ஜாக் மாவுக்கு ஜெயிக்கும் வெறி அதிகமாகும். இது நண்பர்களுக்கும் தெரியும். அவர் உத்வேகம் இந்த நலம் விரும்பிகள் மனங்களில் பயத்தை எற்படுத்தியது. மொழிபெயர்ப்புக் கம்பெனி இப்போதுதான் லாபம் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. இந்த ஆள் உணர்ச்சிவசப்படுபவர். ஆழம் தெரியாத இன்டர்நெட் பாதாளத்தில் குதித்து ஓட்டாண்டியாகப்போகிறார் என்னும் நட்புரிமையான பயம். ஆலோசனை சொன்னார்கள், “இன்டர்நெட் என்றால் என்னவென்று சீனாவில் யாருக்கும் தெரியாது. இந்த பிசினஸ் ஜெயிக்க வாய்ப்பேயில்லை. நீங்கள் மதுபானக் கடை தொடங்குங்கள், உணவுவிடுதி ஆரம்பியுங்கள், மாலைநேர ஆங்கில வகுப்புகள் நடத்துங்கள். அல்லது வெறும் கல்லூரி ஆசிரியராக மட்டுமே இருங்கள். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் தயவுசெய்து இந்த இன்டர்நெட் பிசினஸ் மட்டும் வேண்டவே வேண்டாம்.”

``அருமை நண்பர்களே, உங்கள் அன்புக்கும் அறிவுரைக்கும் மனமார்ந்த நன்றி. ஆலோசித்துப் பார்த்து முடிவெடுக்கிறேன்.”

நண்பர்கள் போனபின் ஜாக் மா மனைவியிடம் பேசினார்.

“காத்தி, நான் இன்டர்நெட் பிசினஸ் தொடங்குவது உனக்குப் பிடிக்கவில்லையா?”

காத்தி சொன்னார், ``எனக்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. நண்பர்கள் சொல்வதைப் பார்த்தால், மிக ரிஸ்க்கானதாகத் தோன்றுகிறது. ஆனால், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் பக்கபலமாக நிற்கிறேன்.”

எத்தனைதான் உறுதியாக இருந்தபோதும், நண்பர்களின் கருத்துகள் ஜாக் மா மனதின் ஓரத்தில் சலன அலைகளை எழுப்பின. கொஞ்சம் நடந்துவிட்டு வந்தால், மனம் தெளிவாகும். சிந்தனைகளில் மூழ்கியபடியே வீதியில் நடந்தார்.

“டிரிங், டிரிங்.”

சைக்கிள் மணி ஒலி.

“ஜாக் மா, ஜாக் மா.”

திரும்பிப் பார்த்தார். அவர் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர். லொட லொட சைக்கிள். முன் பக்கம் சைக்கிள் கைப்பிடியில் இரண்டு பைகள். அவை நிறையக் காய்கறிகள். தலைவர் சந்தைக்குப் போய்விட்டு வருகிறார்.

ஜாக் மா குட் மார்னிங் வைத்தார்.

தலைவர் அறிவுரை. “நீங்கள் வேலையை விட்டுவிட்டு ஏதோ பிசினஸ் தொடங்கப்போவதாகக் கேள்விப்படுகிறேன். வேண்டாம் இந்த விஷப் பரீட்சை. ஆசிரியர் பணியில் தொடருங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.”

“தாங்க் யூ. நான் நிச்சயம் உங்கள் ஆலோசனையை நினைவில் வைத்துக்கொள்ளு வேன்.”

தலைவரின் தலை திரும்பியது. ஜாக் மாவுக்கு அடக்கமுடியாத சிரிப்பு. தன்னை ஐம்பது வயது ஆங்கிலத் துறைத் தலைவராகக் கற்பனை செய்து பார்த்தார். தளர்ந்த உடல், நரைத்த தலை, காயலான் கடை சைக்கிள். அதன் கைப்பிடிகளில் காய்கறிப் பைகள். பேராசிரியர் குறிப்பிட்ட ஒளிமயமான எதிர்காலம் இதுதான்.

“ஐயய்யோ வேண்டாம் அந்த எதிர்காலம்.”

வீட்டுக்கு வந்தார். ஜாக் மா வயது 31. பறந்தது வேலையை விடும் கால் கடிதாசி. பிறந்தது, உலகமே எதிர்த்து நின்றாலும், இன்டர்நெட் பிசினஸ் தொடங்கும் உறுதி.

ஜாக் மாவுக்கு பிசினஸ் பற்றிச் சில லட்சியவாதக் கொள்கைகள் உண்டு. அவர் ஒருமுறை சொன்னார், ``ஏராளமான இளைஞர்கள், இளைஞிகள் இரவில் தங்கள் வருங்காலம் பற்றி அற்புதக் கனவுகள் காண்கிறார்கள். ஆனால், பொழுது விடிந்ததும், அவற்றை மறந்துவிட்டுப் பழைய பாதைகளிலேயே நடக்கிறார்கள். பிசினஸ் தொடங்க அத்தியாவசியமானது, தலைசிறந்த ஐடியா அல்ல. லட்சியம் அல்ல, கனவு அல்ல. உங்கள் கனவை நனவாக்க உங்கள் அனைத்தையும் விலையாகத் தரத் தயாராக இருக்கிறீர்களா என்பதுதான்.”

31 வயது இளரத்தம், பிசினஸ் குறித்த இந்த லட்சிய வெறி, இன்டர்நெட்டை விரைவில் சீனாவுக்கு அறிமுகம் செய்து நாட்டின் வளர்ச்சி எந்திரமாக்கவேண்டும் என்னும் வேகம், ஜாக் மா கண்களை மறைத்தது. சில நடைமுறை நிஜங்களை அவர் சரியாக எடைபோடத் தவறிவிட்டார். 1990 – இல் முதன் முதலாகச் சீனா இன்டர்நெட்டுக்கு அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், வளர்ச்சிக்குப் பல தடைக்கற்கள். நாட்டில் கருத்துச் சுதந்திரம் கிடையாது. ஆகவே, இணையத் தேடலுக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள், தணிக்கை.* அன்று சீனாவில் கம்ப்யூட்டர் விலை 1,800 டாலர்கள். அவர்கள் பொருளாதாரப்படி, பெரிய தொகை. இதனால், 124 கோடிப் பேர் இருந்த 1995 – இல், நாட்டில் விற்பனையான மொத்தக் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை வெறும் 15 லட்சம். இவற்றுள் பெரும்பாலானவை வாங்கியோர் அரசு அலுவலகங்கள். அரசு கட்டமைப்பில் கோடிக்கணக்காக முதலீடு செய்தால் மட்டுமே இன்டர்நெட் பரவலாவது சாத்தியம். அனைத்துக்கும் மேலாக, அலுவலகம் தொடங்க அவர் முடிவு செய்திருந்த சொந்த ஊரான ஹாங்ஸெள நகரத்தில் இன்டர்நெட் இணைப்பே கிடையாது.

*( கூகுள், யூ டியூப். ஃபேஸ்புக், யாஹூ, விக்கிப்பீடியா போன்ற தளங்கள் சீனாவில் இன்றும் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து யாரும் இந்தத் தளங்களைப் பயன்படுத்த முடியாது. சீனப் பகுதியான ஹாங்காங்கில் மட்டும் இந்தத் தடை கிடையாது)

இன்டர்நெட் பிசினஸுக்குச் சீனாவில் முன்னோடியாக இருக்க விரும்பும் தன் ஆசையை நிறைவேற்ற அரசுதான் மந்திரச் சாவி என்று ஜாக் மாவுக்கு அப்போது தெரியாது. திறமையையும், கடும் உழைப்பையும் விலையாகத் தந்தால் போதும் என்று வெகுளித்தனமாக நம்பினார். இதனால், சவால்கள், போராட்டங்கள், சூழ்ச்சிகள், முதுகுக் குத்தல்கள் பல சந்திக்கப்போகிறார்.

முதல் சவால். புரட்டவேண்டும் முதலீடு. பணம், துட்டு, Money, Money.

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x