Published : 23 Feb 2024 04:04 AM
Last Updated : 23 Feb 2024 04:04 AM

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்க ஆரம்ப நிலை ஒப்புதல் பெற விலக்கு @ புதுச்சேரி

புதுச்சேரி: சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்க தொடக்க நிலையில் ஒப்புதல் பெறுவதில் விலக்கு தர புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதி தரப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களைத் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் அத்தொழில் நிறுவனம் அரசிடம் அனுமதியை பெறலாம்.

புதுவை சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவை அமைச்சர் நமச்சிவாயம் அறிமுகப் படுத்தினார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “இந்த சட்ட முன்வரைவை எம்எல்ஏக்களுக்கு முன்கூட்டியே வழங்கியிருக்க வேண்டும். இதன்மீது விவாதம் நடத்திய பின் அனுமதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதற்கு பேரவைத் தலைவர் செல்வம், “ஏற்கெனவே சட்டப்பேரவையில் இதுகுறித்து விரிவாகபேசியுள்ளோம். அதனடிப் படையில் தான் அனுமதி கோரப்படுகிறது” என்றார்.

மீண்டும் குறுக்கிட்ட சிவா, எத்தகைய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்போகிறீர்கள்? பிற மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்போகிறீர்களா? ஏற்கெனவே நம் மாநிலத்திலிருந்து பல தொழிற்சாலைகள் வெளியேறி வருகின்றன. இதனால் நிலம் வழங்குவதில் சலுகை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

தொழிற்சாலைகளுக்கு 3 மாதங்களில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கூறினோம். புதிய சலுகைகளை அறிவியுங்கள் எனச் சொல்கிறோம். இதையெல்லாம் நிறைவேற்றாதது ஏன்? காற்றை மாசுபடுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நமச்சிவாயம், “ஏற்கெனவே விவாதித்து உறுதிமொழி பெற்று சட்ட முன்வரைவை கொண்டு வந்துள்ளோம். சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு விண்ணப்பித்துவிட்டு தொழிலை தொடங்கலாம். 3 ஆண்டுக்குள் அவர்கள் அரசின் அனுமதியைபெறலாம். இந்தச்சட்டம் ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. இது பெரிய தொழிற்சாலை களுக்கானது அல்ல” என்று தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா, “கடந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை தொழிற்சாலைகள் புதுவையை விட்டு வெளியேறியுள்ளன. எத்தனை ஆலைகள் வந்துள்ளன?” என்று கேட்டார். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “புதிய தொழிற்சாலைகள் புதுவைக்கு வந்துள்ளன. அதன்பட்டியலை தர தயாராக உள்ளோம்” என்றார்.

சுயேச்சை எம்எல்ஏ நேரு குறுக்கிட்டு, “நிலத்தடி நீரை உறிஞ்சும் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதியே வழங்கக் கூடாது. நகர பகுதி மக்கள் குடிநீருக்கு தவித்து வருகிறோம். மணப்பட்டில் இருந்து குடிநீர் எடுக்க அப்பகுதி மக்கள் அனுமதி வழங்கவில்லை. எனவே இது குறித்து விவாதம் நடத்த வேண்டும்” என்றார்.

அப்போது பேரவைத் தலைவர் செல்வம் குறுக்கிட்டு, “நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஒரு போதும் அனுமதிதராது” எனக் கூறி, சட்ட முன்வரைவை குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்து, நிறைவேறியதாக அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x