Published : 22 Feb 2024 04:10 AM
Last Updated : 22 Feb 2024 04:10 AM
கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. சென்னை, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ளது போல கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுநல அமைப்புகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப் பட்டது. தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரால், கோவைமெட்ரோ ரயில் திட்டத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
முதல் கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித் தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் ஹால், அவிநாசி சாலை வழியாக நீலம்பூர் வரை 23 கிலோ மீட்டர் தூரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கோவை ரயில் நிலையத்திலிருந்து சத்தி சாலையில் கோவில்பாளையம் அருகேயுள்ள வழியாம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டது.
அறிவிப்பு இல்லை: இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புஎதுவும் இல்லை. மாறாக, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ரூ.10,740 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்காக திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு பகிர்வின் அடிப்படையில் மத்திய அரசின் மூலதன பங்களிப்பு மற்றும் ஒப்புதல் கிடைத்த பின்னர் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக, கோவையில் மெட்ரோ ரயில் பணிகள் எப்போது தொடங்கும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூக செயல் பாட்டாளர் பால சுப்பிரமணியன் கூறும் போது, ‘‘தற்போதைய சூழலில், கோவையின் சீரான போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டம் அவசியமாகும்.
ஆனால், அது தொடர்பான முறையான நிதி ஒதுக்கீடு, ஒப்புதல் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதனால் இத்திட்டம் தொடங்குவது மேலும் தாமதமாகுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. கோவை மெட்ரோ ரயில்திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT