Published : 09 Aug 2014 10:00 AM
Last Updated : 09 Aug 2014 10:00 AM

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.13 கோடி அபராதம்: செபி விதித்தது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ரூ. 13 கோடி அபராதம் விதித்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடுவது தொடர்பான ஒப்பந்தத்தை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செபி இவ்வளவு அதிக தொகை அபராதம் விதிப்பது இதுவே முதல் முறையாகும். வருவாய் விகிதத்தை குறிப்பிடாததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி 12 கோடி பங்குகளை அதன் நிறுவனர்களுக்கு வழங்கியது குறித்து செபி நடத்திய விசாரணை முடிவில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு அளவினை மாற்றி அமைத்தது. இவ்விதம் பங்குகளை மாற்றியதில் நிறுவனத்துக்கு எவ்வளவு தொகை வந்தது என்ற விவரத்தை நிறுவனம் செபி-யிடம் 6 காலாண்டுகளுக்குத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த செபி முடிவு செய்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இந்த நடவடிக்கை பங்குச் சந்தை பட்டியலிடுவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

குறைக்கப்பட்ட பங்கு வெளியீடு மூலம் ஒரு பங்கின் விலை (டிஇபிஎஸ்) விவரத்தை காலாண்டு மற்றும் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவிக்கவில்லை என்று தனது 15 பக்க உத்தரவில் செபி குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அனுப்பிய விளக்கமும் பரிசீலிக்கப்பட்டது. இதன்படி ஒரு பங்கு ஈட்டும் மதிப்பானது (இபிஎஸ்) பங்குகளின் மதிப்பை கணக்கிட உதவும் மிக முக்கியமான அடிப்படையான அளவுகோலாகும். முதலீட்டாளர்களும் இதன் அடிப்படையில்தான் முதலீடுகள் குறித்து முடிவுசெய்வர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜூன் 2007, செப்டம்பர் 2007, மார்ச் 2008, ஜூன் 2008, செப்டம்பர் 2008 ஆகிய காலாண்டுகளில் இபிஎஸ் குறித்த விவரத்தை வெளியிடவில்லை. இந்த விவரங்களை கவனிக்கும்போது ரிலையன்ஸ் நிறுவனம் அப்பட்டமாக விதியை மீறியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே இந்த அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர்கள் ஆதாயமடைந்தார்களா அல்லது இதனால் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதா என்பதற்கான ஆதாரம் ஏதும் இப்போது இல்லை. இருப்பினும் பல லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் மறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அபராதத் தொகையை 45 நாள்களுக்குள் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x