Published : 02 Aug 2014 10:00 AM
Last Updated : 02 Aug 2014 10:00 AM

400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 61க்கு கீழ் சரிந்தது

ஆகஸ்ட் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 414 புள்ளிகள் சரிந்து 25480 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டியும் 118 புள்ளிகள் சரிந்து 7602 புள்ளியில் வர்த்தகத்தை முடித்தது. ஜூலை 9ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிவில் முடிவடைந்தன.

சிஎன்எக்ஸ் மிட்கேப் குறியீடு 74 புள்ளிகளும், பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 98.45 புள்ளிகளும் சரிந்து முடிவடைந்தன. நிப்டி 7602 புள்ளியில் முடிவடைந்திருந்தாலும் வர்த்தகத்தின் இடையே 7600 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. உள்நாட்டு, சர்வதேச நிலவரம் காரணமாக வெள்ளிக்கிழமை சந்தை சரிந்தது. பண அளிப்பை (கியூ.இ3) அமெரிக்க மத்திய வங்கி குறைக்கும் என்ற அச்சமும் சரிவுக்கு காரணம்.

இதற்கிடையில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக் கொள்கையை அறிவிக்க இருக்கிறது. அப்போது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற அச்சம் காரணமாகவும் பங்குச்சந்தைகள் சரிந்து முடிவடைந்தன.

மேலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்து வருவதும் சந்தை சரிவதற்கு காரணமாகும்.

சர்வதேச சந்தைகள் நிலவரம்

சர்வதேச சந்தைகளும் கடுமையாக சரிந்தன. ஆசியாவின் முக்கிய சந்தைகளான நிக்கி, கோஸ்பி, ஷாங்காய் காம்போசிட் மற்றும் ஹேங்செங் ஆகிய சந்தைகள் சரிந்து முடிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடனேயே வர்த்தகத்தை தொடங்கின.

துறை நிலவரம்

அனைத்து துறை பங்குகளும் கடுமையாக சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக கன்ஸ்யூமர் டியூரபிள் துறை 3.27 சதவீதம் சரிந்து முடிவடைந்தது. ஆயில் அண்ட் கேஸ் 2.16%, கேபிடல் குட்ஸ் 1.9% மற்றும் பவர் குறியீடு 1.84% சரிந்து முடிவடைந்தது.

சென்செக்ஸ் பங்குகளில் மாருதி, பார்தி ஏர்டெல், ஹெச்.யூ.எல், ஐசிஐசிஐ வங்கி, மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே உயர்ந்து முடிவடைந்தன. மற்ற அனைத்து சென்செக்ஸ் பங்குகளும் சரிந்து முடிவடைந்தன. குறிப்பாக ஹிண்டால்கோ, கெயில், டாடா பவர், சிப்லா, என்டிபிசி ஆகிய பங்குகள் அதிகம் சரிந்தன.

ரூபாய் மதிப்பு கடும் சரிவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்தது. வியாழக்கிழமை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா சரிந்து 60.54 ரூபாயில் முடிவடைந்தது. வெள்ளிக்கிழமை மேலும் சரிவடைந்து ஒரு டாலர் 61.18 ரூபாயில் முடிவடைந்தது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சதவீதம் அல்லது 110 பைசா அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது.

பங்குச்சந்தைகள் சரிவு குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனிடம் கேட்டபோது, உலக சந்தை நிலவரத்தை நம்மால் தடுக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x