Published : 13 Aug 2014 10:00 AM
Last Updated : 13 Aug 2014 10:00 AM

ஆர்பிஐ கண்காணிப்பில் 34 ஆயிரம் நிறுவனங்கள்: நிர்மலா சீதாராமன்

அனுமதி பெறாமல் நிதிச் சேவையில் ஈடுபட்டுள்ள 34 ஆயிரம் நிறுவனங்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கண்காணித்து வருவதாக நிறுவனங்கள் விவகாரத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்து மூலமாக அளித்த பதிலில் அவர் கூறியது: நிறுவன விவகாரங்கள் துறைக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள பட்டியலில் மொத்தம் 34,754 நிறுவனங்கள் உள்ளன. இவை வங்கியல்லாத நிதி நிறுவனங்களாக நிதிச் சேவையில் ஈடுபடுகின்றன. ஆனால் இவை ரிசர்வ் வங்கியிடம் இதற்கான லைசென்ஸைப் பெற வில்லை என்று குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் விதிகளை மீறி பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளைத் திரட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சிட்பண்ட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பல்வேறு விதிகளில் உள்ள சாதக அம்சங்களை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் சிறிய முதலீட்டாளர்களின் நலனைக் காப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நிறுவன விவகா ரங்கள்துறை அமைச்சகம் எடுத்து வருவதாக அவர் கூறினார்.

முதலீட்டாளர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது, புதிய நிறுவனங்கள் தங்களது செயல் பாடுகளை தெரிவிக்க வேண்டியதை கட்டாயமாக்குதல் மற்றும் சுதந்திரமான தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஓஎன்ஜிசி-யின் 5% பங்குகளை விற்க ஒப்புதல்

பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) 5 சதவீத பங்குகளை விற்பதற்கு கொள்கையளவில் பெட்ரோலிய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில் நிர்மலா சீதாராமன் தெரி வித்தார். இதன் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

கோல் இந்தியா மற்றும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அளவு பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே அமையும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் முதலீட்டாளர் நலனும் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

நடப்பு நிதி ஆண்டில் செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்கு களையும், ஆர்ஐஎன்எல், ஹெச் ஏஎல் ஆகிய நிறுவனங்களில் தலா 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஹிந்துஸ்தான் ஜிங்க் மற்றும் பால்கோ நிறுவனங்களில் அரசுக்கு எஞ்சியுள்ள பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ. 43,425 கோடியும், ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு சொற்ப பங்குகள் உள்ள நிறுவனங்களில் எஞ்சியுள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ. 15 ஆயிரம் கோடியும் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x