Last Updated : 09 Feb, 2018 05:53 PM

 

Published : 09 Feb 2018 05:53 PM
Last Updated : 09 Feb 2018 05:53 PM

கத்தாரில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு: தோஹா வங்கி தலைமை செயல் அதிகாரி பேட்டி!

கத்தாரில் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன, இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கத்தார் நாட்டின் தோஹா வங்கி தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன் கூறினார்.

கத்தார் நாட்டின் முன்னணி வங்கியான தோஹா வங்கியின் கிளை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான ஆர். சீதாராமன் சென்னை வந்துள்ளார். மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது முன்னணி வங்கியாளராக விளங்கி வருகிறார்.

இந்திய பொருளாதாரம், தமிழகத்தில் தொழில் வாய்ப்பு, உலக அளவிலான வர்த்தகம், கத்தார் நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு கருத்துக்களை அவர் தி இந்து தமிழுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி:

சென்னையில் தோஹா வங்கியின் கிளை தொடங்குவதன் திட்டம் என்ன?

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நிதி சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்குவதுடன், கத்தார் - தமிழகம் இடையே வர்த்தக வாய்ப்பை ஊக்குவிப்பதையும் முன்னணி நோக்கமாக கொண்டு சென்னை தோஹா வங்கியின் கிளை செயல்படும். அத்துடன், கத்தாரில் ஏராளமான முதலீட்டாளர்கள் பல்வேறு நாடுகளிலும் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். அவர்களின் பார்வையை தமிழகத்தை நோக்கி திரும்பவும் இது வாய்ப்பாக அமையும்.

இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றி உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் பாராட்டுகின்றனர், ஆனால் உள்நாட்டில் வேறு விதமான கருத்து உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து?

உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் என மற்ற பல வளர்ந்த நாடுகளை ஒப்பிட்டால் இந்திய பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் தற்போது 7.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அடுத்த ஆண்டில் இது, 7.8 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதுபோலவே இந்தியா ஏராளமான இளைஞர் வளம் உள்ள நாடு. தொழில் செய்வதற்கு சாதகமான சூழல் வளர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் சந்தை பெரிய அளவில் விரிவடைய வாய்ப்புள்ளது. எனவே தான் இந்தியாவில் முதலீடு செய்ய பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு அதிகரித்து வருவது இதனை உறுதிபடுத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு, கடந்த மூன்றாண்டுகளில் 60 பில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு முதலீடு குவிந்துள்ளது. இதனால் உலக அளவில் சர்வதேச நிதியம் உட்பட பல அமைப்புகளும் இந்திய பொருளாதாரத்திற்கு சான்றளிக்கின்றன. எனவே உலக பொருளாதார வல்லரசாக இந்திய உயருவதற்கான தருணம் வந்து விட்டதாகவே எண்ணுகிறேன். இந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே தான் இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கானது என நான் சொல்லி வருகிறேன்.

மத்திய பட்ஜெட் குறித்து?

பட்ஜெட் தொடர்பாக இந்தியாவில் அரசியல் ரீதியாகவும், அல்லது வேறு வகையிலும் மாறுப்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியர் என்ற பார்வையிலும், வங்கியாளர் என்ற கண்ணோட்டத்திலும் மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு துறைகளுக்கு கூடுதல் நிதியும் வரவேற்கதக்கது. பெரிய அளவில் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுவது நல்ல முயற்சியே.

பொருளாதார தேசியம்

sitharamanPNGசீதாராமன் 

உலக அளவில் பொருளாதார சூழல் எவ்வாறு உள்ளது?

உலக அளவிலேயே தற்போது பொருளதாரம் புதிய பாதையை நோக்கி பயணப்பட்டு வருகிறது. தாரளமய பொருளாதாரம் என்ற பாதையில் இருந்து விலகி பொருளாதார தேசியம் என்ற பாதையில் பொருளாதாரம் பயணப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா இந்த திசையை நோக்கி வேகமாக செல்லத் தொடங்கியுள்ளது. வடக்கு அமெரிக்க பொருளாதார ஒப்பந்தத்தை அந்நாடு ஏற்கவில்லை. மாறாக தனது சொந்த பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

தொழில் துறையில் தற்போது எதுபோன்ற மாற்றங்கள் நடந்து வருகின்றன?

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகவேகம் கண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் தொழில் மற்றும் வர்த்தக முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். இ- காமர்ஸ் வந்த பின் தொழில் செய்யும் நடைமுறை வெகுவாக மாறியுள்ளது. இ - கவர்னன்ஸ் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. எங்கிருந்து எங்கும் தொழில் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் தொழில் செய்யும் முறையும் மாறியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஏன்? இந்திய பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு மற்றும் கூட்டமைப்பில் இல்லாத மற்ற உற்பத்தி நாடுகளுக்கும் இடையே எழுந்த பிரச்னை காரணமாக அதன் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டது. அதேசமயம் தேவை அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. டாலர் மதிப்பு சரிந்ததும், கச்சா எண்ணெய் வர்த்தகம் அதிகரித்ததும் அதன் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தன. எனினும் இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 65 டாலர்கள் என்ற அளவில் இருக்கும் என எண்ணுகிறேன். கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும். வட்டி விகிதங்கள் உயரக்கூடும். எனினும் பெரிய பாதிப்பு இல்லாமல் கட்டுக்குள் இருக்கும் என நம்புகிறேன்.

இந்தியர்களுக்கு - தமிழர்களுக்கு வாய்ப்பு

வளைகுடா நாடுகளுக்குள் எழுந்த மோதல் விவகாரத்திற்குபின் கத்தார் சந்தித்து வரும் சவால்கள் குறித்து?

கத்தாருடனான உறவை மற்ற வளைகுடா நாடுகள் முறித்ததன் எதிரொலியாக அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் உண்மையில் அதற்கு மாறாக கத்தாரின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி குறியீட்டை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக கையிருப்பு உள்ளது. வளைகுடா நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுடன் பொருளாதார ரீதியாக கத்தார் கோர்த்து செயல்படுகிறது. மற்ற வளைகுடா நாடுகளை நம்பி இருக்காமல், சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கத்தாரில் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் கத்தார் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. அதுபோலவே இந்தியர்கள் கத்தாரில் தொழில் தொடங்கவும் வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.

இதில் தமிழகத்திற்கு எந்த அளவிற்கு வாய்ப்புகள் உள்ளன? தமிழக தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தலாம்?

கத்தார் நாடு உணவுக்காக 90 சதவீதம் வரை வெளிநாடுகளையே நம்பியுள்ளது. மற்ற வளைகுடா நாடுகளுக்கும், கத்தாருக்கும் பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து உள்நாட்டு உணவு உற்பத்தியில் கத்தார் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உணவு உற்பத்திக்காக அதிக முதலீடு செய்ய கத்தார் தொழிலதிபர்கள் முன் வருகின்றனர். உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த தொழில் தொடங்க கத்தார் அரசு இடம், வரி குறைப்பு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வங்கிகளும் குறைந்த வட்டியில் கடன் தருகின்றன. எனவே உணவு பதப்படுத்துதல் துறையில் அதிக வாய்ப்புள்ளது. இந்திய தொழிலதிபர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கு தொழில் தொடங்கலாம். இதுமட்டுமின்றி சென்னை உள்ளிட்ட இடங்களில் உணவுப்பதப்படுத்துதல் துறை சார்ந்தவர்கள் தங்கள் பொருட்களை அதிகஅளவில் கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுபோலவே சிறு மற்றும் குறு நிறுவன அளவிலான தொழில்கள் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு சீதாராமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x