Published : 19 Dec 2017 10:52 AM
Last Updated : 19 Dec 2017 10:52 AM

ஆன்லைன் ராஜா 06: மூன்று முக்கிய சந்திப்புகள்

ங்கிலாந்திலிருந்து ஜோன்ஸ் என்பவர் சுற்றுலாப் பயணம் வந்திருந்தார். ஊர் சுற்றிப் பார்க்கவேண்டும், ஹோட்டலில் யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. என்ன செய்வதென்று தெரியாத குழப்பம், வீதிக்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்தார், அங்கே ஒரு பையன் கறுப்பு பேண்ட். முழங்கை வரை மடித்துவிட்ட வெள்ளைச் சட்டை. சிரித்த முகம். ஒரு கால் சைக்கிள் பெடலில். இன்னொரு கால் தரையில் ஊன்றியபடி ஸ்டைல் போஸ். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் அவர் அருகே வந்தான். கேட்டான்,

“நான் உங்கள் கைடாக வரட்டுமா? ஃப்ரீ.”

ஜோன்ஸுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். ஆங்கிலம் பேசுகிறான்! முதல் பார்வையிலேயே அவனைப் பிடித்தது.

``ஹே, ஸன்ஷைன் பாய் (Sunshine Boy). ஓக்கே” என்று சம்மதித்தார்.

Sunshine Boy என்றால், பார்க்கும்போது உற்சாகம் தொற்றவைக்கும் பையன் என்று அர்த்தம். இது ஜோன்ஸின் வெறும் வாய் வார்த்தையல்ல, மனம் நிறைந்து சொன்ன நிஜம்.

சிறுவன், ஜோன்ஸை சைக்கிளின் பின் சீட்டில் உட்காரச் சொன்னான். சைக்கிள் ஓட்டிக்கொண்டே, ஒவ்வொரு இடத்தையும் விளக்கினான். பாதி தூரம் போகும்போது, பேசிக்கொண்டே சைக்கிள் மிதிக்கும் அவனுக்கு மூச்சு வாங்கியது. சிறுவனை ஓட்டவைத்து, ஜாலியாகத் தான் பின்சீட்டில் வருவதில் ஜோன்ஸுக்குக் குற்ற உணர்வு. சைக்கிளை நிறுத்தச் சொன்னார். அவனைப் பின் சீட்டில் உட்காரவைத்து ஓட்டத் தொடங்கினார். அவன் பெயர் கேட்டார். “மா யுன்” என்று சொன்னான். அவருக்கு இந்தச் சீனப் பெயர் வாயில் நுழையவில்லை. அவருக்கு ``ஜாக்” என்னும் பெயர் பிடிக்கும். அவனிடம் கேட்டார்,

“நான் உன்னை ஜாக் மா எனறு கூப்பிடட்டுமா?’

அவன் தலையசைத்தான்.

விடை பெறும்போது ஜோன்ஸ் கணிசமான பணம் டிப்ஸ் தந்தார். அவன் வாங்கிக்கொள்ள மறுத்தான்.

“குட் பை ஜாக் மா” என்று வழியனுப்பினார்.

நெடுங்காலம் பழகிய நண்பரிடமிருந்து பிரிவதுபோல் அவன் திரும்பிப் பார்த்தபடியே போனான்.

வீட்டுக்கு வந்தவுடன், ``மை நேம் இஸ் ஜாக் மா” என்று பல முறை சொல்லிப் பார்த்துக்கொண்டான். அவனுக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்துவிட்டது . அப்பாவிடம் சொன்னான். சீன மொழி தெரியாதவர்களுக்கும் உச்சரிக்கச் சுலபமாக இருக்கும் என்று நினைத்தார். இனிமேல், ஜோன்ஸுக்கு மட்டுமல்ல, அவருக்கும், உலகத்துக்கும், அவன் பெயர் மா யுன் இல்லை. ஜாக் மா

இவன் பெயரை மாற்றிய சந்திப்பு இது.

இவன் வாழ்க்கையை மாற்றிய இன்னும் இரண்டு சந்திப்புகள்…..

ஆஸ்திரேலியாவிலிருந்து சுற்றுலாப் பயணம் வந்திருந்தார் கென் மார்லி (Ken Morley). அவரோடு மனைவி ஜூடி, இரு மகன்கள் டேவிட், ஸ்டீஃபன், மகள் சூஸன். ஒரு நாள் மாலை நேரம். அவர்கள் தங்கியிருந்த கோல்டன் மவுன்ட்டன் ஹோட்டலின் அருகே இருந்த பூங்காவில் உட்கார்ந்திருந்தார்கள்.

சீனாவில் அப்போது வீடியோ கேம்ஸ் கிடையாது. சிறுவர்களிடையே, இரண்டு பேர் விளையாடும் தீக்குச்சி விளையாட்டு பிரபலம். நெருப்புக் குச்சியின் தலைப்பகுதி தரையில் படும்படி செங்குத்தாக நிறுத்தவேண்டும். இடது கை விரலால், குச்சியின் நுனியைப் பிடித்துக்கொண்டு வலது கை விரலால் சுண்டவேண்டும். யார் சுண்டுவதில் அதிகக் குச்சிகள் எரிகிறதோ, அவர் ஜெயித்தவர். டேவிட் பதினைந்து வயதுப் பையன். அவனுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது. ஒரு சீனச் சிறுமியோடு விளையாடிக்கொண்டிருந்தான்.

ஜாக் மா அங்கே வந்தான். தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவனுக்கும், டேவிடுக்கும் சுமார் சம வயது. இருவருக்குள்ளும் ஈர்ப்பு. ஓரிரு நாட்களிலேயே நட்பு இறுகியது. பிரியும் நாள் வந்தது. பேனா நண்பர்களாக நட்பைத் தொடரவேண்டும் என்னும் உறுதிமொழியுடன் விலாசங்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.

ஆஸ்திரேலியா திரும்பிய டேவிட் கடிதம் போட்டான். உடனே ஜாக் மா பதில். பரிவர்த்தனை தொடர்ந்தது. டேவிட், ஜாக் மாவின் கடிதங்களை அப்பாவிடம் காட்டுவான். சீனச் சிறுவனிடம் ஏதோ ஒரு பொறி இருப்பதைக் கென் மார்லி உணர்ந்தார். அவன் கடிதங்களில் இலக்கணப் பிழைகள் இருக்கும். அவற்றைத் திருத்தி அனுப்பத் தொடங்கினார். இந்த வழிகாட்டல், தன் ஆங்கில எழுத்துத் திறமையை வளர்த்துக்கொள்ள ஜாக் மாவுக்குப் பெரிதும் உதவியது. அவருக்கும் கடிதங்கள் எழுதத் தொடங்கினான். கென் மார்லியை அவன் எப்படி விளித்தான் தெரியுமா? ‘Dear Dad,” (அன்புள்ள அப்பா) ஆமாம், நட்பு பாசமாக வளர்ந்துவிட்டது.) கென் மார்லிக்கும் இப்படித்தான், ஜாக் மா மூன்றாவது மகன்.

சில மாதங்களில் ஜாக் மாவின் கல்லூரிப் படிப்பு தொடங்கியது. படிப்பு இலவசம். ஃபீஸ் கிடையாது. ஆனால், கட்டாயமாக ஹாஸ்டலில் தங்கவேண்டும். குடும்பத்தைப் பிரிந்துபோக முதலில் சிரமமாக இருந்தது. வாழ்க்கையில் எதையாவது பெற இன்னொன்றை இழக்கவேண்டும் என்னும் நிதர்சனம் புரிந்தது. ஆங்கிலம் அவனுக்குப் பிடித்த பாடம். முதன் முதலாகப் படிப்பில் ஜொலிக்கத் தொடங்கினான். கணக்கில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில், இதுவரை அவன் தன்னை ஒரு முட்டாளாக நினைத்துக்கொண்டிருந்தான். தானும் புத்திசாலிதான் என்னும் நம்பிக்கையைக் கல்லூரி ஏற்படுத்தியது. நோபல் பரிசு பெற்ற பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சொன்னார்,``உலகத்தில் எல்லோரும் மேதைகள்தாம். மீனை, மரம் ஏறும் திறமையை வைத்து எடை போட்டால், வாழ்நாள் முழுக்கத் தான் முட்டாள் என்று அது நம்பிக்கொண்டிருக்கும்.” ஜாக் மா ஐன்ஸ்டினின் பொன்மொழியைப் படித்தான். அவர் தனக்காகத்தான் சொன்னாரோ என்று நினைத்தான்.

ஜாக் மா கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வான். பேச்சுக் கலையின் வெற்றிக்குச் சில மந்திரச் சாவிகள் உண்டு. கீ கொடுத்த பொம்மை போல், உருப்போட்ட பேச்சை ஒப்பிக்கக்கூடாது; தேவையான இடங்களில் கைகளை ஆட்டி அழுத்தம் தரவேண்டும்; ஒரு சிலர் முகங்களை மட்டுமே பார்த்துப் பேசக்கூடாது; தன்னிடம்தான் உரையாடுகிறார் என்று ஒவ்வொருவரும் நினைக்கும்படி, அரங்கம் முழுக்கப் பார்வையைச் சுழலவிட வேண்டும்; அவர்களோடு கண்-தொடர்பு ஏற்படுத்த வேண்டும், ஜாக் மா இதில் மன்னன்.

ஆனால், ஒரு நாள் கல்லூரி மேடையில் பேசும்போது, இந்த யானைக்கே அடி சறுக்கியது. கூட்டத்தில் வழக்கம் போல் பார்வையைப் படரவிட்டான். மூன்றாவது வரிசையில் ஒரு பெண். பளிச் கறுப்புக் கண்கள்.

நெற்றியில் விழுந்து காற்றில் பறந்த முடி. அவள் மீது வைத்த கண்களை ஜாக் மாவால் எடுக்கவே முடியவில்லை. உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது. அவனுக்குப் பல தோழிகள் உண்டு. அவர்கள் யாரிடமும் ஏற்படாத உணர்வு. வார்த்தை தடுமாறியது. எப்படியோ பேச்சை முடித்தான்.

ஜாக் மாவுக்கு எல்லாமே ஸ்பீட், ஸ்பீட், ஸ்பீட்தான். கூட்டம் முடிந்தவுடன் அந்தப் பெண்ணிடம் ஓடிப் போனான். தன்னை அறிமுகம் செய்துகொண்டான். கையை நீட்டினான்.

``நான் ஜாக் மா. இந்தச் சந்திப்பு நாம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளும் ஆரம்பம். என்னை மறுபடியும் சந்திக்க உனக்கு நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

தயங்கியபடியே, அவள் கையை நீட்டினாள். ஜாக் மா இறுகப் பிடித்துக் கையைக் குலுக்கினான்.

அவள் சொன்னாள், ``என் பெயர் ஜாங் யிங் (Zhang Ying). எல்லோரும் காத்தி (Cathy) என்று கூப்பிடுவார்கள். உங்களைச் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்.”

ஜாக் மாவுக்கு இது போதும், கோடு போடச் சொன்னால் ரோடு போடுபவன். சில சந்திப்புகள். காதல் மலர்ந்தது. ``படிக்கும்போது என்ன காதல்? ஒழுங்காகப் படித்து முடி” என்று அம்மா, அப்பா திட்டுவார்கள் என்று ஜாக் மாவுக்கு பயம். வீட்டுக்குத் தெரியாத ரகசியமாக வைத்துக்கொண்டான்.

காத்தியிடம் ஒரு தோழி கேட்டாள், ``ஜாக் மாவை நீ ஏன் காதலித்தாய்?”

காத்தி பதில்,``ஜாக் மா பேரழகரல்ல. ஆனால், அந்த வயதில் அவருடைய சாதனைகள் அழகானவர்கள் நினைத்தே பார்க்கமுடியாதவை. சிறு வயதில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டி, பத்திரிகை டெலிவரி…”

காதலில் விழுந்தபோதும், தன் வருங்காலம் படிப்பில்தான் இருக்கிறது என்று ஜாக் மாவுக்குத் தெரியும். படிப்பிலும் முதல் இடம்.

முதல் வருடப் படிப்பு முடிந்தது. கோடை விடுமுறை. ஜாக் மாவுக்கு அடிக்கப்போகிறது ஒரு பம்பர் லாட்டரி!

(குகை இன்னும் திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x