Published : 14 Feb 2024 05:16 AM
Last Updated : 14 Feb 2024 05:16 AM
நொய்டா: இந்தியா மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் மைக்கேல் ஸ்பென்ஸ். நேற்று முன்தினம் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் உலகின் பொருளாதாரப் போக்குக்குறித்தும் அவர் கலந்துரையாடினார். இந்தியாவில் 2016-ம்ஆண்டு யுபிஐ கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது. பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.
இந்நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து மைக்கேல் ஸ்பென்ஸ் பேசுகையில், “தற்போது இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதுடன், பெரும் வளர்ச்சிக்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. சிறந்த டிஜிட்டல்பொருளாதாரத்தையும் நிதி கட்டமைப்பையும் இந்தியா உருவாக்கியுள்ளது. இந்தியாவின் போட்டித் தன்மை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதாரப் போக்குகுறித்து பேசிய அவர், “கடந்த 70 ஆண்டுகளாக இருந்துவந்த பொருளாதார கட்டமைப்பு தற்போது மாற்றம் அடைந்து வருகிறது. கரோனா, சர்வதேச அரசியல் பிரச்சினைகள், காலநிலை மாற்றம் ஆகியவை இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
பெரு நிறுவனங்கள், தங்களுக்கான விநியோகத்துக்கு குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, பல இடங்களில் தங்களுக்கான விநியோக தளங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது உலகின் பொருளாதாரப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, மருத்துவத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் கட்டமைப்பை நோக்கிய நகர்வு ஆகியவை மனித வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியவை ஆகும். புதிய தொழில்நுட்பங்களை நாம் சரியாக பயன்படுத்தினால் மனிதகுலம் மேம்படும். பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...