Last Updated : 14 Feb, 2024 04:04 AM

 

Published : 14 Feb 2024 04:04 AM
Last Updated : 14 Feb 2024 04:04 AM

கிருஷ்ணகிரியில் மா மரங்களை பராமரிக்க தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் விவசாயிகள்

கிருஷ்ணகிரி அருகே எம்.ஜி.அள்ளி பகுதியில் உள்ள தோட்டத்தில் விலை கொடுத்து வாங்கிய தண்ணீரை மா மரத்துக்கு பாய்ச்சும் விவசாயி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி தோட்டங்களில் உள்ள மா மரங்களைப் பராமரிக்கத் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி பணி மேற்கொள்ளப் படுகிறது. குறிப்பாக, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், சூளகிரி, ஓசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மா ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

வேலை வாய்ப்பு: இதில், மல்கோவா, அல் போன்ஸா, செந்தூரா, பீத்தர் ஆகிய மா ரகங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஊறுகாய், ஜூஸ் தயாரிப்பு உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் மா சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. மா மகசூல், விற்பனை, ஏற்றுமதி என ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

பருவ நிலை மாற்றம்: இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பருவ நிலை மாற்றங்களால் மா விவசாயிகள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை குறைந்ததால், இறவை பாசன சாகுபடி மாந் தோட்டங்களில் உள்ள மரங்களில் பூக்கள் பூத்த நிலையில், மானாவாரி தோட்டங்களில் உள்ள மாமரங்களுக்குத் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. வறட்சியிலிருந்து மரங்களைக் காக்க பல விவசாயிகள் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மா மரங்களைப் பராமரித்து வருகின்றனர். இதனால், வழக்கத்தை விட பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.700: இது தொடர்பாக மா விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்தர ராஜன் கூறியதாவது: நடப்பாண்டில் மா சீசன் தொடங்குவதில் கால தாமதம் ஏற்படும். இறவைச் சாகுபடி மா மரங்களில் அதிகளவில் பூக்கள் பூத்துள்ளன. மானாவாரி தோட்டங் களில் உள்ள மாமரங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் ஒரு டிராக்டர் தண்ணீரை ரூ.700 கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் தண்ணீர் தேவையும், சீசன் முடியும் வரை 4 முறை தண்ணீர் விடும் நிலையுள்ளது. மேலும், மானாவாரி தோட்டங்களில் இப்போது தான் பூக்கள் விடத்தொடங்கியுள்ளன.

பூச்சி மருந்து விலை உயர்வு: இதே போல, பூச்சிகளை கட்டுப்படுத்த தெளிக்கப்படும் மருந்தின் விலையும் கடந்தாண்டை விட 30 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், மா விவசாயிகளுக்கு வழக்கத்தைவிடப் பராமரிப்பு செலவு இருமடங்கு உயர்ந்துள்ளது. இதனிடையே, பனியின் தாக்கம் அதிகம் உள்ளதால் பூக்கள் கருகி வருகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாங்காய்க்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். மா தோட்டங்களுக்கு முழு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைப்பு ஏற்படுத்தவும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக் கலைத் துறை மூலம் உரிய ஆலோசனை மற்றும் மானியத்தில் மருந்துகள் வழங்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x