Published : 13 Feb 2024 04:43 PM
Last Updated : 13 Feb 2024 04:43 PM

காதலர் தினம்: ரோஜா மலர் ஏற்றுமதியில் இந்தியாவை முந்திய ஆப்பிரிக்க நாடுகள்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: புதிய ரகங்கள் இல்லாததாலும், தரமில்லாத ரோஜா பூக்கள் உற்பத்தியாலும் வெளிநாட்டு ஏற்றுமதியில் இந்தியாவை, ஆப்பிரிக்கா நாடுகள் முந்தியது. இந்த ஆண்டு காதலர் தினத்தில் ரோஜா பூக்களுக்கு உள்நாட்டு சந்தைகளிலும் பெரிய வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் திண்டுக்கல், ஓசூர், ஊட்டி போன்ற இடங்களில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 95 சதவீதம் மலர் உற்பத்தி ஓசூரிலும், மீதி 5 சவீதம் மட்டுமே மற்ற இரண்டு இடங்களிலும் நடக்கிறது. காதலர் தினத்தில் ரோஜா பூக்களுக்கு சர்வதேச சந்தைகள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை பெரும் வரவேற்பு உண்டு. அதனால், ஓசூர் உள்பட தமிழகத்தில் இருந்து ஒரு கோடி ரோஜா மலர்களுக்கு மேல் ஏற்றுமதியாகும்.

மதுரை, கோவை, சென்னை மலர் சந்தைகளில் ரோஜா பூக்களுக்கு காதலர் தினம் மட்டுமில்லாது முகூர்த்த நாட்கள், விழா காலங்களில் வரவேற்பு இருக்கும். இந்நிலையில் நடப்பாண்டு காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், ரோஜா பூக்களுக்கு கடந்த காலங்களை போல் பெரும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து அகில இந்திய மலர்கள் உற்பத்தியாளர்கள் கவுன்சில் இயக்குநரான பாலசிவ பிரசாத் கூறுகையில், ''சர்வதேச அளவில் நெதர்லாந்து, கொலம்பியா, கென்யா, எத்தோப்பியா, கென்யா, ஈக்வேடார் மற்றும் சைனா நாடுகளில் ரோஜா பூக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆப்ரிக்கா நாடுகளில் 50 முதல் 100 ஏக்கரில் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

நெதர்லாந்தில் ரோஜா பூக்களுக்கான சர்வதேச சந்தை உள்ளது. சைனாவின் புத்தாண்டு தினம் கடந்த 10-ம் தேதி நடந்தது. அதனால், சீனாவில் உற்பத்தியாகும் பூக்கள், அந்நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கே போதுமானதாக உள்ளது. அதனால், அவர்கள் பெரியளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமாட்டார்கள். தற்போது இந்தியாவில் புது ரகங்கள் இல்லாமை, தரமில்லாத உற்பத்தி போன்றவற்றால் வெளிநாட்டு ஏற்றுமதி இந்தியாவில் குறைந்தது.

முன்பு முஸ்லிம் நாடுகளின் விடுமுறை தினமான வெள்ளிக்கிழமையும், மற்ற நாடுகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் காதலர் தினம் வந்தால் ரோஜா பூக்கள் விற்பனை குறைவாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு புதன்கிழமை காதலர் தினம் வந்தாலும் எதிர்பார்த்த அளவு ரோஜா பூக்கள் விற்பைனை இல்லை.

விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஸ்டம்புடன் கூடிய ஒரு ரோஜா பூ ரூ.10 முதல் ரூ.13 வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதனை இந்த நேரத்தில் ரூ.60 முதல் ரூ.100 வரை பூக்களுடைய தரத்தைப் பொறுத்து விற்கிறார்கள். அதுவே, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு ஒரு ரோஜா பூ ரூ.16 முதல் ரூ.18 கொடுக்கிறார்கள். இந்த முறை காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர் பகுதிகளில் இருந்து 30 லட்சம் பூக்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி உள்ளது.

தற்போது ஓசூர் உள்பட தமிழகத்தில் முதன்மையான ரோஜா பூக்கள் உற்பத்தியாவதில்லை. தாஜ் மகால் வந்தபிறகு, கிராண்ட்கலா, ப்ஸ்ட்ரெட், அப்பர் கிளாஸ் போன்ற பிற ரக மலர்களை உற்பத்தி செய்வதில்லை. அப்பர் கிளாஸ் ரோஜா மலர்களை ஓர் ஆண்டிற்கு ஒரு சதுர மீட்டருக்கு 180 பூக்கள் உற்பத்தி செய்யலாம். ஆனால், தாஜ்மகால் ரோஜா சாகுபடியில் 90 முதல் 100 பூக்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது.

அதேநேரத்தில் வெளிநாட்டு ரக ரோஜா மலர்களை 240 பூக்கள் வரை உற்பத்தி செய்கிறார்கள். அதுபோல், ரோஜா மலர்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்போது 18 சதவீதம் விர செலுத்த வேண்டும். அந்த வரி அரசு மீண்டும் ஏற்றுமதி செய்கிறவர்களுக்கு திருப்பி வழங்கும் நடைமுறை உள்ளது. ஆனால், இந்த திருப்பி ஒப்படைக்கும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாததால் மலர் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால், வெளிநாட்டிற்கு மலர்களை ஏறு்றுமதி செய்வதில் விவசாயிகளும், ஏற்றுமதியாளர்களும் முன்போல் ஆர்வம் காட்டவில்லை. தற்போது தமிழகத்தில் உற்பத்தியாகும் தாஜ்மகால் ரோஜா, 20 ஆண்டிற்கு முன் வந்த ரகம். ஆனால், சர்வதேச அளவில் புதுசு, புதுசா நிறைய பூக்கள் வந்துவிட்டன. வெளிநாடுகளில் உற்பத்தியாகும் பூக்கள், 6 செ.மீ, முதல் 7.4 வரை நீளம் உள்ளது.

ஆனால், நமது தாஜ்மகால் பூக்கள் 4.5 செமீ நீளத்தை தாண்டுவதில்லை. அதுபோல், நமது பூக்களுடைய காம்பு 50 செ.மீ முதல் 55 செ.மீ., வரை உள்ளது. ஆனால், வெளிநாட்டு ரக பூக்கள் 90 முதல் 100 செமீ நீளம் கொண்டவையாக உள்ளன. அதுபோல் பூக்களின் தரமும், நிறமும் வெளிநாட்டு பூக்களில் சிறப்பாக உள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x