

புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எப். முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பி.எப். மத்திய அறங்காவலர் வாரியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம்ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. பிஎப் அமைப்பின் முடிவு எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) இதற்கான பரிந்துரையை வழங்கும்.
அந்த வகையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ்தலைமையில் 235-வது மத்தியஅறங்காவலர் வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகுதொழிலாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் குவிந்துள்ள முதலீட்டுக்கு நடப்பு 2023-24 நிதியாண்டில் வருடாந்திர வட்டியாக 8.25% வழங்க சிபிடி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பிறகு அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்’’ Zன கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020-21 நிதியாண்டில் பி.எப். முதலீட்டுக்கான வட்டியாக 8.5% வழங்கப்பட்டது. கரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதால், 2021-22 நிதியாண்டிக்கான வட்டி 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக 8.1% ஆக குறைக்கப்பட்டது. அதன் பிறகு 2022-23 நிதியாண்டுக்கான வட்டி 8.15% ஆக உயர்த்தப்பட்டது.