Published : 08 Feb 2024 07:20 AM
Last Updated : 08 Feb 2024 07:20 AM
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார். இது அவர் நிதி அமைச்சாராக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட்.
நிர்வாகம், மேம்பாடு, செயல்பாடு இவற்றின் அடிப்படையில் இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல விதங்களில் வலுவான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை நிர்மலா சீதாரமன் தன் பட்ஜெட் உரையில் சுட்டிக் காட்டினார். ஏழைகள், விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சர்வதேச நாடுகளுடனான உறவு என பல தளங்களில் கடந்த 10 ஆண்டில் இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது.
இந்நிலையில், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்குக்கான பாதை இந்தப் பட்ஜெட்டில் வகுக்கப்பட்டுள்ளது.
குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல், நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை குறைத்தல், மக்கள் வாழ்வில் அரசின் தலையீட்டைக் குறைத்தல், தொழில்நுட்பங்களை வரவேற்றல் என அடுத்த 25 ஆண்டுகால பயணத்துக்கான கொள்கைகளை இந்தப் பட்ஜெட் கொண்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்துக்கான பரீட்ச்சையான மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தவிர, பிரதமர் மோடியின் தற்போதைய இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது. இந்தச் சூழலில், இந்தப் பட்ஜெட் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, மிகச் சிறப்பாக பட்ஜெட்டை உருவாக்கியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
பரீட்ச்சைக்குத் தயாராகும் மாணவர்களில் பெரும்பாலானோர் முக்கியத்துவமற்ற பகுதிகளை விட்டுட்டு, முக்கியமான பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், நிர்மலா சீதாராமன் காளையை அடக்குவதுபோல், துணிச்சலாக அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை 5.8 சதவீதமாக அவர் மறுநிர்ணயம் செய்துள்ளார். 2024-25 நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 5.1 சதவீதமாகவும், 2025-26 நிதி ஆண்டில் 4.5 சதவீதமாகவும் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்திய குடும்பங்கள் மீதான நிதி சுமையை குறைப்பதற்கான பயணம் இது.
சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த தனியார் முதலீடுகள் மிகவும் அவசியம் ஆகும். தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை இந்தப் பட்ஜெட் கொண்டுள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாடு, வேளாண், வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, ஆய்வு, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு, பொது உள்கட்டமைப்பு, கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துதல், சுற்றுலா என பலதளங்களில் பிரதமர் மோடி முன்வைத்த இலக்கை நோக்கிய நகர்வாக இந்தப் பட்ஜெட் அமைந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைக் கொண்ட ஒரு தனித்துவமான வினாத் தாள். அவற்றில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பதில்களும் சரியானவையே. அந்த வகையில், அனைத்துத் தளங்களிலும் இந்தப் பட்ஜெட் பாஸ் ஆகி உள்ளது. இனி, மக்களவைத் தேர்தல் எனும் பரீட்ச்சையில் மக்கள்தான் மதிப்பீடு வழங்க வேண்டும்.
- முனைவர் எஸ்.வைத்யசுப்ரமணியம் | கட்டுரையாளர்: துணை வேந்தர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், நன்றி: தி பிஸினஸ் லைன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT