Published : 07 Feb 2024 04:56 PM
Last Updated : 07 Feb 2024 04:56 PM
விருத்தாசலம்: வங்கிகளில் நிலையான வைப்பு நிதி செலுத்தும் வாடிக்கையாளர்களிடம், ‘வட்டிக்கு வரி விதிக்கப்படும்' என்ற தகவலை முன்கூட்டியே கூறாமல், முதிர்ச்சி யடைந்த பின் பணத்தை எடுக்கும்போது 10 சதவீ தம் வரி செலுத்த வேண்டும் எனக் கூறுவது அதிர்ச்சியாக இருப்பதாக வைப்புநிதி செலுத்தும் வாடிக்கையாளர்கள் வருத்தத்தோடு கூறுகின்றனர்.
நிலையான வைப்பு நிதி என்பது பாதுகாப்பான முதலீட்டு கருவியாக பொதுமக்களால் பார்க் கப்படுகிறது. குறிப்பாக ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு, நிலையான வைப்பு நிதி பல நன் மைகளையும் கொண்டிருக்கின்றன. எனவே தான் பெரும்பாலான சம்பளதாரர்கள், தங்களது ஓய்வு காலத்துக்குப் பின், தங்களது பணப்பயன்களை செலவிடாமல், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு வங்கிகளில் வைப்பு நிதியாக செலுத்துவதுண்டு.
குறிப்பாக பணத்துக்கான பாதுகாப்பு கருதி பொதுத்துறை அல்லது அஞ்சலக வைப்பு நிதிக்குதான் முக்கியத்துவம் அளிப்பர். ஏனென்றால் இது ஒரு சொத்து சார்ந்த விஷயமாக அவர்களால் கணிக்கப்படுகிறது.
நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து வட்டியைப் பெறுவது வழக்கம். நிலையான வைப்பு நிதி முதிர்ச்சி அடையும்போது முதலீட்டாளர்கள் வட்டி மற்றும் அசல் தொகை இரண்டையும் பெறுவார்கள். கூடுதலாக, ரூ.5 லட்சம் வரையிலான வைப்பு நிதிகளுக்கு இந்திய வைப்பு காப்பீட்டு உத்தரவாதக் கழகத்தால் காப்பீடு செய்யப்படுகின்றன.
அவ்வாறு சம்பளதாரர் ஒருவர் வங்கியில் வாடிக்கையாளராக இருந்துவிட்டு, ஓய்வு பெறும்போது அவரை சந்திக்கும் வங்கி மேலாளர், “சார் உங்களுக்கு வங்கி எந்த அளவுக்கு சேவை புரிந்திருக்கிறது? திருப்தியடையும் வகையில் இருந்ததா?” எனக் கேட்டுவிட்டு, அடுத்து “உங்களது பி.எப், கிராட்ஜூவிட்டி உள்ளிட்டவற்றை நம்ம வங்கியிலேயே டெபாசிட் செய்யலாமே.! வட்டி 7.25 சதவீதம் கிடைக்கும், பாதுகாப்பாகவும் இருக்கும். இடையில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
அதற்குரிய வசதி உள்ளது.” எனக் கூறுவார்களே தவிர, நிலையான வைப்பு நிதி மூலம் ஈட்டப்படும் வட்டி வருமானமாகக் கருதப்பட்டு, அதற்கு 10 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்ற தகவலை பெரும்பாலான வங்கி மேலாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.
அண்மையில் திட்டக்குடியில் உள்ள பொதுத் துறை வங்கியில் மூத்த தம்பதியினர் தங்களது பேத்தி பெயரில் போடப்பட்ட ரூ.10 லட்சம் வைப்பு நிதி முதிர்ச்சியடைந்த நிலையில் அதை எடுக்கச் சென்றபோது, வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் எனக் கூறியதும் அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு மட்டுமல்ல கள்ளக்குறிச்சியில் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றிலும் வைப்பு நிதி முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பலர் கவலையோடு அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.
திட்டக்குடியைச் சேர்ந்த அந்த மூத்த தம்பதியிடம் பேசியபோது, “குறைந்த வட்டியாக இருந்தாலும், எதிர்காலத் தேவையின் பாதுகாப்புக் கருதிதான் டெபாசிட் செய்தோம். இப்போது வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் என்பதோடு, பல்வேறு ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கின்றனர். பணத்தை எடுப்பதற்குள் படாதபாடு பட வேண்டியுள்ளது.
டெபாசிட் செய்யும்போதே, ‘வட்டிக்கு வரி விதிப்பு உண்டு’ என்ற தகவலை சொல்லியிருந்தால், பணத்தை வேறு வழியில் முதலீடு செய்திருப்போம், இவ்வளவுத் தொகை செலுத்தியிருக்க மாட்டோம். அதை கூற இவர்கள் முன்வராதது பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை குறைத்து வருகிறது.
ஏற்கெனவே குறைந்தபட்ச இருப்பு இல்லை என பிடித்தம், சேவைக் கட்டணம் என பல்வேறு இன்னல்களுக்கு இடையே வைப்பு நிதிக்கான வட்டிக்கு வரி என்பது வேதனை அளிக்கிறது” என்றனர்.
இதுதொடர்பாக சில பொதுத்துறை வங்கிக்கிளை மேலாளர்களிடம் பேசியபோது, “எஃப்டியில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். இது உங்கள் மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, உங்கள் முழு வருமானத்துக்கும் பொருந்தும் ‘ஸ்லாப்’ விகிதங்களில் வரி விதிக்கப்படும்.
முதலீட்டாளர்கள் அதைத் தங்கள் வரிக் கணக்கில் 'பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்' என்ற வகையின் கீழ் அறிவிக்க வேண்டும். மேலும் 15-ஜி படிவம் மூலம் வங்கிக்கு தெரியப்படுத்தினால், நாங்கள் வட்டி பிடித்தம் செய்வதை தவிர்ப்போம். வைப்பு நிதி செலுத்தும்போதே வட்டிக்கு வரிஎன்றால், முதலீடு செய்யத் தயங்குவர் என்பதால், சில மேலாளர்கள் அவ்வாறு கூறுவதை தவிர்த் திருக்கலாம். மற்றபடி வாடிக்கையாளரை வருத்த மடையச் செய்வது எங்கள் நோக்கமல்ல” என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT