Published : 07 Feb 2024 09:40 AM
Last Updated : 07 Feb 2024 09:40 AM
கொடைக்கானல்: கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மலைப்பூண்டு போதிய விளைச்சல் இல்லாமல் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப் பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பயிரிட்ட 120 நாட்களில் மலைப் பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால், ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்.
கொடைக்கானல் பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மலைப் பூண்டு, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர் மழை, சீதோஷ்ண நிலை மாற்றம் போன்ற காரணங்களால் விளைச்சல் 70 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு வரத்து குறைந்துள்ளதால், மலைப் பூண்டு விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.250 வரை விற்றது. தற்போது விலை இரு மடங்கு அதிகரித்து ரூ.500-க்கு விற்பனையாகிறது. விளைச்சல் பாதித்தாலும் போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து பூண்டு விவசாயிகள் கூறியதாவது: மழை மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பூண்டு வளர்ச்சிக்கு உதவும் நீர் பனி இல்லாததால், விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் பூண்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளி மாநில பூண்டு வரத்தும் குறைந்ததால், கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை மெல்ல அதிகரித்து வருகிறது. விளைச்சல் பாதித்தாலும் விலை உயர்வால் விவசாயிகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து வரத்து இல்லையெனில், மலைப் பூண்டு விலை மேலும் அதிகரிக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT